மீனவர்களுக்காக ரூ.216.13 கோடி மதிப்பில் திட்டங்கள் அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்
சென்னை: மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, 216.13 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை, முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
சட்டசபையில், 110 விதியின் கீழ், நேற்று அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:
கச்சத்தீவை மீட்க வேண்டும். இலங்கை சிறையில் வாடும் நம் மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். அவர்களின் படகுகளை திருப்பித்தர வேண்டும் என, கடந்த 2ம் தேதி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினோம்.
இலங்கை சென்ற பிரதமர் மோடி, இதுகுறித்து இலங்கை அரசுடன் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி, தீர்மானத்தை அவருக்கு அனுப்பி வைத்தோம்.
பிரதமர் மோடி இலங்கை சென்றார். அப்போது, மீனவர் விடுதலை மற்றும் கச்சத்தீவு மீட்பு குறித்து பெரிய அளவில் முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. சிறையில் வாடும் 97 மீனவர்களும், சிறை பிடிக்கப்பட்ட படகுகளும் மீட்கப்பட்டு, தாயகம் திரும்புவர் என்ற எதிர்பார்ப்பு நிறைவேறாதது ஏமாற்றத்தை அளிக்கிறது.
மத்திய அரசும், பிரதமரும் நம் கோரிக்கைகளை புறக்கணிக்கின்றனர் என்றே கருத வேண்டியுள்ளது. மத்திய அரசு எப்படி நடந்து கொண்டாலும், நம் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நாம் தவற மாட்டோம். தி.மு.க., அரசு அவர்களுக்கு எப்போதும் துணை நிற்கும்.
மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு காணும் முயற்சியின் ஒரு பகுதியாக, தமிழக அரசு சில முன்னெடுப்புகளை எடுத்துள்ளது.
l மன்னார் வளைகுடா பகுதி மீனவர்கள், ஆழ்கடல் மீன்பிடிப்புக்காக, தெற்கு பகுதியில் இந்திய பெருங்கடல் நோக்கி செல்வதற்கு வசதியாக, தங்கச்சிமடம் பகுதியில் 150 கோடி ரூபாயில் மீன்பிடி துறைமுகம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
விரைவில் பணிகள் துவங்கும். மேலும், 60 கோடி ரூபாயில் பாம்பன் பகுதியிலும், 150 கோடி ரூபாயில் குந்துக்கல் பகுதியிலும், மீன்பிடி துறைமுகப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
இவை தவிர, மன்னார் வளைகுடா பகுதியில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த, சில புதிய திட்டங்களை செயல்படுத்த உள்ளோம். அதன் விபரம்:
l கடற்பாசி வளர்ப்பு, பதப்படுத்துதல், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள், விற்பனை தொடர்புடைய தொழில்களுக்கு தொழில்நுட்ப பயிற்சியுடன், தேவையான உபகரணங்கள் அளித்து, 7,000 பேரை தொழிலில் ஈடுபடுத்தும் திட்டம், 52.33 கோடி ரூபாயில் செயல்படுத்தப்படும்
l கூண்டு முறையில் மீன் மற்றும் சேற்று நண்டு வளர்ப்பு, பதப்படுத்துதல், விற்பனை தொடர்புடைய தொழில்களை மேற்கொள்ள, 25.82 கோடி ரூபாய் செலவில், உபகரணங்கள் வழங்கப்படும்
l மீன் பதப்படுத்துதல், மீன் உலர்த்தும் தொழில்நுட்பங்கள், உபகரணங்கள் வழங்கி பயிற்சி அளிக்கும் திட்டம், 2,500 குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு, 9.90 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்
l மீன் மற்றும் மீன் சார்ந்த மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயார் செய்வதற்கான தொழில்நுட்ப பயிற்சி வழங்க, 15,300 மீனவர்களுக்கு 20.55 கோடி ரூபாய் செலவிடப்படும்
l வலை பின்னுதல், வலை பழுதுபார்த்தல், படகு கட்டுமான தொழில், படகு பழுது பார்த்தல், கருவாடு தயாரித்தல், வண்ண மீன் தொட்டிகள் தயாரித்தல், படகு ஓட்டுநர் பயிற்சி, கடல் சிப்பி அலங்கார பொருட்கள் தயாரித்தல் போன்ற தொழிலில் 20,000 மீனவர்கள் ஈடுபட வழி செய்யும் திட்டம், 54.48 கோடி ரூபாயில் செயல்படுத்தப்படும்
l காளான் வளர்ப்பு, சுற்றுலா படகு இயக்குதல், கைவினை பொருட்கள் தயாரித்தல், வீட்டு முறை மசாலா பொடிகள் தயாரித்தல், அழகுக்கலை பயிற்சி, சிறுதானிய உணவு தயாரித்தல் போன்றவற்றை கற்று, 14,700 பேர் பயன்பெறும் திட்டம், 53.62 கோடி ரூபாயில் செயல்படுத்தப்படும்
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மீன்பிடி துறைமுகங்கள் அமைக்கும் திட்டம், 360 கோடி ரூபாயிலும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டம், 216.13 கோடி ரூபாயிலும் செயல்படுத்தப்படும். இத்திட்டங்களால், மன்னார் வளைகுடா பகுதி மீனவர்கள் பெரிதும் பயனடைவர்.
இவ்வாறு முதல்வர் அறிவித்தார்.