வக்ப் சட்ட மசோதாவை எதிர்ப்பது... சட்டவிரோதம்! எதிர்க்கட்சிகள் மீது பா.ஜ., பாய்ச்சல்

1


'பார்லிமென்டில் நிறைவேற்றப்படும் எந்த ஒரு சட்டத்திற்கும் கடுமையான விமர்சனம் தெரிவித்து, அச்சட்டத்தை எதிர்ப்பது இதுவரை நடந்தது கிடையாது. தமிழக சட்டபையில் வக்ப் சட்டத்தை விமர்சனம் செய்வது, அரசியலமைப்பு சட்டத்துக்கு முற்றிலும் விரோதமானது. இவ்வாறு அவமதிப்பு செய்வதன் வாயிலாக, அரசியலமைப்பு சட்டத்தின்மீது அவர்களுக்கு எந்த மரியாதையும் இல்லை என்பதையே காட்டுகிறது' என, பா.ஜ., கடுமையாக சாடியுள்ளது.


டில்லியில் நேற்று ராஜ்யசபா எம்.பி.,யும், பா.ஜ., செய்தித் தொடர்பாளருமான சுதான்சு திரிவேதி கூறியதாவது:


வக்ப் சட்ட விவகாரத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் அரசியலமைப்பு சட்டத்தையும், அதன் முக்கிய நடைமுறைகளையும் திரும்பத் திரும்ப இழிவுபடுத்துகின்றன. அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இது தொடர்பாக பல்வேறு மனுக்களை கோர்ட்டில் தாக்கல் செய்தபடி உள்ளனர்.

இதில், இரண்டு விஷயங்கள் உள்ளன. முதலாவதாக, நீதி வழங்கும் நடைமுறைகளில் அரசியலை திணிப்பது என்பது, உச்ச நீதிமன்றத்தின் கண்ணியத்துக்கு சரியானது அல்ல. இரண்டாவதாக, தங்கள் இஷ்டம்போல தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரும் தனித்தனியே கோர்ட்டை நாடுகின்றனர்.

இதன் வாயிலாக, அவர்கள் தங்களுக்குள் ஒருவரையொருவர் நம்பவில்லை. வக்ப் சட்ட விஷயத்தில் யார் யாரை முந்துவது என்ற போட்டி இவர்களுக்குள் நடைபெறுகிறது.

நீதிமன்ற நடைமுறைக்கு எதிர்க்கட்சிகள் உரிய மரியாதையை தரவேண்டும். எப்போது நீங்கள் சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்று விட்டீர்களோ, இனி அரசியல் ரீதியான விமர்சனங்கள் மற்றும் குற்றச்சாட்டுகளை தவிர்த்து விட வேண்டும்.

அரசியல் ரீதியில் எதையும் பேசக்கூடாது. அதையும் மீறி நீங்கள் விமர்சனம் செய்தால், அது, கோர்ட்டின் மாண்பை குறைப்பதாகும்.

வக்ப் சட்ட விஷயத்தில், அரசியலமைப்பு சட்டத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு தான் மத்திய அரசு முடிவுகளை எடுத்துள்ளது. இதனால், இந்த சட்டத்தை சுப்ரீம் கோர்ட் நிலைநிறுத்தும். அந்த நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

தமிழகம் போன்ற மாநிலங்கள் இந்த வக்ப் சட்டத்தை எதிர்க்கின்றன. இந்த மாநிலங்கள் தங்களது சட்டசபைகளில் அதற்கான எதிர்ப்பை அழுத்தமாகத் தெரிவித்து விமர்சனம் செய்கின்றன. இது, அரசியலமைப்பு சட்டத்துக்கு முற்றிலும் விரோதமானது.

இத்தகைய செயல், அரசியலமைப்பு சட்டத்தின் மீது இந்த மாநில அரசுகளுக்கு எந்த மரியாதையும் இல்லை என்பதையும், அதை அவமதிப்பு செய்கின்றனர் என்பதையும் காட்டுகிறது.

அரசியலமைப்பு சட்டத்தின்படி பார்லிமென்டில் நிறைவேற்றப்படும் எந்த ஒரு சட்டத்தையும் தவறான கருத்துகளை தெரிவித்து, அச்சட்டத்தை எதிர்ப்பது இதுவரை நடந்தது கிடையாது. ஜம்மு - காஷ்மீர் சட்டசபையில் இந்த சட்டநகல் கிழிக்கப்பட்டுள்ளது. இது, அரசியல்அமைப்பு சட்டத்துக்கு எதிரானது.

இவ்வாறு அவர் கூறினார்.





- நமது டில்லி நிருபர் -

Advertisement