சி.கே.டி., டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வந்த லாரி சிக்னலில் அடுத்தடுத்து வாகனங்களில் மோதி விபத்து; அதிர்ஷ்டவசமாக தப்பினார் ஆவடி போலீஸ் கமிஷனர்

சோழவரம், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில், வரும் 19ம் தேதி முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் 'ரோடு ஷோ' நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடு பணிகளை, ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் முடுக்கி விட்டுள்ளார்.
இந்த நிலையில், காவல் துறை அதிகாரிகளுடன் விழா நடைபெறும் இடம், ரோடு ஷோ நடைபெறும் சாலைகளில் கமிஷனர் சங்கர் நேற்று கள ஆய்வு மேற்கொண்டு, ஆலோசனை வழங்கினார். ஆய்வு முடிந்து, அங்கிருந்து தன் 'இன்னோவா' காரில் புறப்பட்டார்.
முன் இருக்கையில் டிரைவர் மற்றும் பாதுகாவலரும், பின் இருக்கையில் கமிஷனர் சங்கரும் அமர்ந்திருந்தனர். ஆவடி நோக்கி புறப்பட்ட கார், சோழவரம் அடுத்த செம்புலிவரம் பகுதியில் உள்ள சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில் சிக்னலில் நின்றது. பின்னால் மஹிந்திரா சரக்கு லாரி ஒன்று நின்றிருந்தது.
அப்போது, கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை நோக்கி வேகமாக வந்த லாரி ஒன்று, திடீரென கட்டுப்பாட்டை இழந்து, தறிகெட்டு ஓடி கமிஷனரின் காருக்கு பின்னால் நின்றிருந்த மஹிந்திரா சரக்கு லாரி மீது மோதியது. சரக்கு லாரி கமிஷனரின் கார் மீது இரண்டு முறை பயங்கரமாக மோதி விபத்து ஏற்படுத்தியது.
இதில், கார் பலத்த சேதமடைந்தது. இந்த விபத்தில் முன் இருக்கையில் அமர்ந்திருந்த கமிஷனரின் பாதுகாவலர் மாரிசெல்வம், 35, காயமடைந்தார். டிரைவர் மற்றும் கமிஷனர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர்.
மாரிசெல்வத்தை மீட்டு, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். கமிஷனர் வேறு காரில் அலுவலகம் திரும்பினார். இந்த விபத்து சம்பவத்தால், சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், சிறிது நேரம் போக்குவரத்து கடுமையாக பாதித்தது.
விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தி, போலீசார் போக்குவரத்தை சீர்செய்தனர். விபத்து தொடர்பாக, செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
முதல்கட்ட விசாரணையில் டயர் வெடித்து, கட்டுப்பாட்டை இழந்த லாரி, மஹிந்திரா சரக்கு லாரி மீது மோதியதும், அதை தொடர்ந்து, கமிஷனரின் கார் விபத்தில் சிக்கியதாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.