திருச்சி டி.ஐ.ஜி.,யின் அவதுாறு வழக்கு; சீமானுக்கு நீதிமன்றம் ஒருநாள் கெடு

1



திருச்சி : திருச்சி டி.ஐ.ஜி., வருண்குமார் தொடர்ந்த அவதுாறு வழக்கில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், நீதிமன்றத்தில் ஆஜராக, ஒருநாள் கெடு கொடுத்து, நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
திருச்சி மாவட்ட எஸ்.பி.,யாக இருந்த வருண்குமார் மற்றும் மனைவி, தாயார், குழந்தைகள் உள்ளிட்ட அவரது குடும்பத்தாரை, சமூக வலைதளங்களில், நாம் தமிழர் கட்சியினர் அவதுாறு பரப்பினர்.

இதுகுறித்து திருச்சி, தில்லை நகர் போலீசில் எஸ்.பி., வருண்குமார் புகார் அளித்தார். மேலும், திருச்சி, நான்காவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானிடம், 2 கோடி ரூபாய் கேட்டு, தனிப்பட்ட வழக்கையும் எஸ்.பி., வருண்குமார் தொடர்ந்தார்.

இந்நிலையில், திருச்சி டி.ஐ.ஜி.,யாக, வருண்குமார் பதவி உயர்த்தப்பட்டார். அவர் தொடர்ந்த அவதுாறு வழக்கில் நேரில் ஆஜராகி, தனது தரப்பு வாதத்தை, மாஜிஸ்திரேட் முன் வாக்குமூலம் அளித்தார். ஆனால், சீமான் நேரில் ஆஜராக உத்தரவிட்டும், அவர் ஆஜராகவில்லை.

நேற்றைய விசாரணைக்கு, சீமான் கண்டிப்பாக, ஆஜராக வேண்டும் என மாஜிஸ்திரேட் உத்தரவிட்டிருந்தார். சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையுடன் கலந்துகொண்ட சீமான், மாஜிஸ்திரேட் உத்தரவுப்படி ஆஜராகவில்லை.

இதையடுத்து, மாஜிஸ்திரேட் விஜயா, 'மாலை, 5:00 மணிக்குள் ஆஜராக விட்டால், ஜாமினில் வெளியே வர முடியாத, பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும்' என, அறிவித்தார். ஆனாலும், மாலை வரை சீமான் கோர்ட்டுக்கு வரவில்லை. அவர் சார்பில் ஆஜரான வக்கீல், 'சீமான், சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளதால் வரமுடியவில்லை. ஒரு நாள் அவகாசம் கொடுங்கள். நாளை ஆஜராவார்' என்றார்.

இதையடுத்து, இன்று, திருச்சி மாவட்ட நான்காவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராக நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Advertisement