ஹிந்து மதத்தினரை யாரும் சங்கடப்படுத்தாதீர்: திருமாவளவன்

14



சென்னை: 'வக்ப் திருத்த சட்ட மசோதாவுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில், ஹிந்து மதத்தினரை சங்கடப்படுத்தும் வகையில் யாரும் பேச வேண்டாம்' என, கட்சி நிர்வாகிகளுக்கு, வி.சி., தலைவர் திருமாவளவன் அறிவுறுத்தி உள்ளார்.
மத்திய அரசு வக்ப் திருத்த சட்டத்தை நிறைவேற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வி.சி., சார்பில் இன்று மாநிலம் முழுதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது. இதையொட்டி, கட்சி நிர்வாகிகளிடம், 'வீடியோ' வழியே திருமாவளவன் பேசியதாவது:

மத்திய பா.ஜ., அரசை கண்டித்து நடக்கும் ஆர்ப்பாட்டத்தில், கட்சி நிர்வாகிகள், முஸ்லிம் அமைப்புகள் மற்றும் கூட்டணி கட்சிகளை பங்கேற்க செய்ய வேண்டும். இது, கட்சியின் பலத்தை நிரூபிக்கும் ஆர்ப்பாட்டம் அல்ல; நாட்டு மக்களை ஒருங்கிணைத்து நடத்துகிற போராட்டம். விமர்சனம் என்ற பெயரில், மற்ற மதங்களுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பக் கூடாது.

எல்லா மதங்களின் உணர்வுகளையும் மதிக்க வேண்டும். மதத்தின் மீதான, மதம் போதிக்கிற கருத்துகள் மீதான பார்வை வேறுபடலாம். விமர்சனங்கள் இருக்கலாம்; முரண்பாடு இருக்கலாம்.

ஆனால், முஸ்லிம் மதத்தின் வாழ்வாதாரத்திற்கு குரல் கொடுக்கிற சூழலில், ஹிந்து மதத்தைச் சார்ந்தவர்கள் சங்கடப்படும் வகையில், எந்த கருத்தையும் முன்வைக்கக் கூடாது. ஹிந்து சமூகத்தைச் சேர்ந்தவர்களை காயப்படுத்தக் கூடாது.

எல்லாம் மதங்களையும், மக்களின் நம்பிக்கை அடிப்படையில் மதிக்க வேண்டும். அரசியல் நிலைப்பாட்டை தெரிவிப்பதில் உறுதியாக இருப்போம். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா போன்றோரை, விமர்சனம் என்ற பெயரால் அவமதிக்கும் வகையில் பேசிவிடக் கூடாது.

தனிநபர்களாக முரண்பாடு இருந்தாலும், அவர்களின் பதவி பொதுவானது. தனி நபராக அவர்களை விமர்சிக்க உரிமை உள்ளது. அவர்கள் எப்படி முஸ்லிம்களுக்கு எதிராக உள்ளனர் என்பதை சொல்லுங்கள். இந்த அரசியல் தெளிவோடு போராட்டங்கள் நடத்தப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement