மாவட்டத்தில் ஒரே நாளில் 335 மி.மீ., மழைப் பொழிவு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 335 மி.மீ., அளவிற்கு சூறைக் காற்றுடன் கனமழை பெய்தது.

கடந்த ஒருவாரமாக வளிமண்டல சுழற்சி, வெப்பச் சலனம் காரணமாக மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. பகலில் வெயில் வாட்டினாலும் மாலையில் கருமேகம் சூழ்ந்து மழை பொழிகிறது.

ஏப். 2, 3ல் மொத்தம் 337.1 மி.மீ., மழை பெய்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 9:30 மணிக்கு மேல் இடி, மின்னல், பலத்தக் காற்றுடன் 335.40 மி.மீ., மழை மாவட்டத்தில் கொட்டித் தீர்த்தது. சூறைக் காற்றால் பல இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனால் நள்ளிரவில் மின்தடை ஏற்பட்டது. திருச்சுழியில் ரோட்டில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது.

மாவட்டத்தில் அதிகபட்சமாக காரியாபட்டி 64.20 மி.மீ., சிவகாசி 46.80 மி.மீ., கோவிலங்குளம் 45.40 மி.மீ., ஸ்ரீவில்லிப்புத்துார் 42.10 மி.மீ., விருதுநகர் 41.20 மி.மீ., சாத்துார் 32 மி.மீ., அருப்புக்கோட்டை 19 மி.மீ., வத்திராயிருப்பு 17 மி.மீ., பெரியாறு பிளவக்கல் 14.20 மி.மீ., வெம்பக்கோட்டை 9.50 மி.மீ., ராஜபாளையம் 4 மி.மீ., மழை பெய்தது. சராசரியாக 27.95 மி.மீ., மழை பதிவானது.

Advertisement