நீட் தேர்வு தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டம்: புறக்கணிப்பதாக அறிவித்தார் இ.பி.எஸ்.,

49

சென்னை: நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்வது குறித்து தி.மு.க. அரசு நாடகம் நடத்தி வருகிறது; இது தொடர்பாக மாநில அரசு கூட்டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை புறக்கணிப்போம் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கூறியுள்ளார்.


அவரது அறிக்கை:
ஏப்ரல் ஒன்பதாம் தேதி பேரவை அனைத்து சட்டமன்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்ட உள்ளதாக சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு செய்துள்ளார். இந்த கூட்டத்தில் அதிமுக பங்கேற்காது.

'நீட் நுழைவுத் தேர்வை மத்திய அரசுதான் ரத்து செய்ய முடியும், மாநில அரசு அல்ல, அந்த உரிமை மாநில அரசிற்கு இல்லை என்பதை ஸ்டாலினே ஒத்துக்கொண்டுள்ளார்.
மேலும், 2021 சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது, நீட் குறித்த வழக்கு நிலுவையில் இருந்தது தெரிந்திருந்தும் ஸ்டாலினும், உதயநிதியும் அதை மறைத்து, வாக்குகள் பெறுவதற்காக பொய்யாக தேர்தல் பிரசாரம் செய்தார்கள்.

தி.மு.க.,வின் இரட்டை வேடத்தால் இதுவரை, நீட் நுழைவுத் தேர்வில் போதிய மதிப்பெண் எடுக்க முடியாது என்ற மன வருத்தத்தில் 20 மாணவ, மாணவிகள் தங்கள் இன்னுயிரை மாய்த்துள்ளனர்.
2021ல் ஸ்டாலின் மாடல் திமுக அரசு பொறுப்பேற்றது முதலே, தமிழகத்தில் ஏதேனும் பிரச்சனை என்றால், உடனடியாகக் குழு அமைப்பது; அறிக்கை விடுவது; அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவது; சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவது என்பது, செய்த தவறுகளை மக்களிடம் மறக்கச் செய்யும் நாடகமாக உள்ளது.

நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்வதாக பொய்யான வாக்குறுதி அளித்து மாணவர்களையும், பெற்றோர்களையும் ஏமாற்றியதற்கு, முதல்வர் ஸ்டாலினும், அவரது மகன் உதயநிதியும் தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்கும் காலம் விரைவில் வரும்.

இவ்வாறு இ.பி.எஸ். அறிக்கையில் கூறியுள்ளார்.

Advertisement