தங்கக்கட்டி கொள்ளை வழக்கு: 5 தமிழர் கைது; ஒருவர் தற்கொலை

தங்கவயல் : ஆந்திர வனப்பகுதியில் நடந்த தங்கக்கட்டிகள் கொள்ளை தொடர்பாக, தமிழகத்தை சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். ஒருவர், தன் வீட்டின் அருகே தற்கொலை செய்து கொண்டார்.

கர்நாடக மாநிலம், தங்கவயலை சேர்ந்த நகை வியாபாரி தீபக் குமார். இவர், கடந்த 2ம் தேதி, 3.8 கிலோ எடையுள்ள தங்க கட்டிகளை சென்னையில் வாங்கிக் கொண்டு, காரில் தங்கவயல் கிளம்பினார்.

தமிழகத்தின் பேர்ணாம்பட்டு வழியாக ஆந்திர மாநிலம் வி.கோட்டா போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட நாயக்கனேரி வனப்பகுதியில், இரவு நேரத்தில் வந்தபோது, ஒரு கும்பல் காரை வழிமறித்து, தங்க கட்டிகளை கொள்ளையடித்து தப்பியது.

மறுநாள் காலையில் வி.கோட்டா போலீஸ் நிலையத்தில் தீபக் குமார் புகார் செய்தார். கார் டிரைவர் முக்தர் பாஷாவிடம் தீவிர விசாரணை நடத்தியபோது, அவரது உதவியுடன் கொள்ளை நடந்தது தெரியவந்தது.

சம்பவத்தில் ஈடுபட்ட தங்கவயல் நகராட்சி காங்., கவுன்சிலர் ஜெயபால், கார் டிரைவர் முக்தர் பாஷா, சண்முகம், கே.ஆர்.பாபு ஆகிய நான்கு பேரை ஆந்திர போலீசார், 5ம் தேதி இரவு கைது செய்து சிறையில் அடைத்தனர். கொள்ளையில் தொடர்புடைய மேலும் சிலரை தேடி வந்தனர்.

இந்நிலையில், பேர்ணாம்பட்டை சேர்ந்த வேதாச்சலம், குமரேசன், குடியாத்தத்தை சேர்ந்த ரஞ்சித், தீபன் சக்ரவர்த்தி, சூரவேல் ஆகிய ஐந்து பேரை நேற்று கைது செய்தனர்.

சம்பவத்தில் தொடர்புடைய அப்பு என்பவர், பேர்ணாம்பட்டில் உள்ள தன் வீட்டின் அருகே உள்ள மரத்தில் நேற்று துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Advertisement