'கியா' கார் நிறுவனத்தில் 900 இன்ஜின்கள் திருட்டு
பெனுகொண்டா : ஆந்திராவில், 'கியா' நிறுவனத்தின் கார் தயாரிப்பு ஆலையில் கடந்த ஐந்து ஆண்டுகளில், 900 கார் இன்ஜின்கள் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திராவின் ஸ்ரீ சத்யசாய் மாவட்டத்தில் உள்ள பெனுகொண்டா என்ற இடத்தில், கிழக்காசிய நாடான தென் கொரியாவைச் சேர்ந்த, 'கியா' கார் தயாரிப்பு நிறுவனத்தின் ஆலை செயல்படுகிறது.
இந்த ஆலையில், அவ்வப்போது கார் இன்ஜின்கள் மாயமாகி வந்தன. கடந்த மாதத்தில் மட்டும், 100க்கும் மேற்பட்ட இன்ஜின்கள் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து, ஆலை நிர்வாகிகள் அளித்த புகாரின்படி, போலீசார் வழக்குப் பதிந்தனர்.
பெனுகொண்டா சப் - டிவிஷன் போலீஸ் அதிகாரி வெங்கடேஷ்வர்லு கூறுகையில், “கார் இன்ஜின் திருட்டு, 2020 முதல் நடந்து வருகிறது.
ஐந்து ஆண்டுகளில் இதுவரை, 900 இன்ஜின்கள் திருடப்பட்டுள்ளன. இதில் வெளியாட்கள் ஈடுபட வாய்ப்பில்லை.
“ஆலையில் இதற்கு முன் பணிபுரிந்த ஊழியர்கள் மற்றும் தற்போது பணிபுரியும் ஊழியர்கள் சிலருக்கு, இந்த திருட்டில் தொடர்பு இருக்கலாம் என, சந்தேகிக்கிறோம்.
''தீவிர விசாரணை நடக்கிறது; திருட்டில் ஈடுபட்டோர் விரைவில் பிடிபடுவர்,” என்றார்.