தமிழில் பெயர் பலகை புறக்கணிப்பு? விருதை ரயில் நிலையத்தில் அதிருப்தி

சென்னை - திருச்சி ரயில்வே மார்க்கத்தில், விருத்தாசலம் ரயில் நிலையம் முக்கிய சந்திப்பு. பாசஞ்சர், எக்ஸ்பிரஸ், சூப்பர் பாஸ்ட், தேஜஸ், வந்தே பாரத் என 50க்கும் மேற்பட்ட ரயில்கள் செல்கின்றன.

மும்பை, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உட்பட பல்வேறு மாநில, மாவட்டங்களுக்கும் ரயில் வசதி உள்ளது. இதனால் கடலுார், பெரம்பலுார், அரியலுார், கள்ளக்குறிச்சி, சேலம் மாவட்ட மக்கள் பயனடைகின்றனர்.

இந்நிலையில், நாடு முழுவதும் 525 ரயில் நிலையங்களை மேம்படுத்தும் விதமாக அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், 9.50 கோடி ரூபாயில் அலங்கார முகப்பு, நவீன டிக்கெட் கவுண்டர், பயணிகள் ஓய்வறை, 4 நடைமேடைகளிலும் மேற்கூரை, இருக்கைகள், குடிநீர், கழிவறைகள், சிக்னல் அறை, சிசிடிவி கேமராக்கள் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் புதுப்பிக்கும் பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது.

இம்மாத இறுதியில் திறப்பு விழாவுக்கு தயாராகி வரும் நிலையில், புதிய கட்டடத்திற்கு மேற்புறம், 'விருத்தாசலம் ரயில் நிலையம் என தமிழ், ஹிந்தி, ஆங்கிலம்' ஆகிய மூன்று மொழிகளில் பெயர் பலகை வைக்கப்படுகிறது.

இதற்காக ஹிந்தி, ஆங்கிலம் என இருமொழிகளில் ஒளிரும் மின் விளக்குகளுடன் பெயர் பலகை வைக்கப்பட்டு, நேற்று முன்தினம் இரவு மின் விளக்குகளால் ரயில் நிலைய முகப்பு ஜொலித்தது.

அப்போது, தமிழில் பெயர் பலகை இல்லாதது குறித்து அதிருப்தியடைந்த பொது மக்கள், அதனை படம் எடுத்து, விருத்தாசலம் ரயில் நிலையத்தில் தமிழ் புறக்கணிப்பு என சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

காட்டுத்தீ போல பரவியது குறித்து தகவலறிந்த தெற்கு ரயில்வே நிர்வாகம் இதனை முற்றிலுமாக புறக்கணித்துள்ளது.

இது குறித்து திருச்சி ரயில்வே மக்கள் செய்தி தொடர்பு அலுவலர் வினோத் கூறுகையில்,'தமிழில் போடப்பட்ட பெயர் பலகையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இயங்கவில்லை. அதனை பழுது நீக்கியதும் பொறுத்தப்படும். அதுவரை மற்ற மொழிகளில் உள்ள பெயர் பலகைகளும் மூடிவைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது' என்றார்.

விருத்தாசலம் ரயில் நிலையத்தில், தமிழில் பெயர் பலகை இல்லாதது குறித்து சமூக வலைதளங்களில் வைரலானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஐ லவ் விருத்தாசலம்

'ஐ லவ்' விருத்தாசலம் என்ற அடையாளத்துடன் வரவேற்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. திறப்பு விழா காணாத நிலையிலும் உள்ளூர் பயணிகள், ஆர்வமுடன் செல்பி எடுத்துச் செல்கின்றனர்.



ஐ லவ் விருத்தாசலம்

'ஐ லவ்' விருத்தாசலம் என்ற அடையாளத்துடன் வரவேற்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. திறப்பு விழா காணாத நிலையிலும் உள்ளூர் பயணிகள், ஆர்வமுடன் செல்பி எடுத்துச் செல்கின்றனர்.

Advertisement