குழந்தைகள் சிகிச்சைக்கு உதவி பெரிய நிறுவனங்கள் முன்வருமா?

பெங்களூரு : ''அரிய வகை நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு பெரிய நிறுவனங்கள் முன்வர வேண்டும்,'' என, அமைச்சர் சரண பிரகாஷ் பாட்டீல் கூறினார்.

பெங்களூரில், நேற்று மருத்துவ கல்வித்துறை அமைச்சர் சரண பிரகாஷ் பாட்டீல் அளித்த பேட்டி:

கர்நாடகாவில் நுாற்றுக்கணக்கான குழந்தைகள் அரிய வகை நோய்களால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் சிலருக்கு சிகிச்சை அளிப்பதற்கு லட்சக்கணக்கான ரூபாய் தேவைப்படுகிறது.

சில குழந்தைகளுக்கு 50 லட்சம் முதல் 1 கோடி ரூபாய் வரை தேவைப்படுகிறது. இதுபோன்ற குழந்தைகளுக்கு மத்திய அரசு, என்.பி.ஆர்.டி., எனும் திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்குகிறது.

கடந்த 2016 முதல் மாநிலத்தில் உள்ள இந்திரா காந்தி குழந்தைகள் சுகாதார நிறுவனத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அரிய வகை நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் விதமாக நாட்டில் உள்ள 13 சிறப்பு மையங்களில் இதுவும் ஒன்று. இந்த சுகாதார மையத்திற்கு மாநில அரசு 76 கோடி ரூபாய் மானியமாக வழங்கி உள்ளது. தற்போது, கூடுதல் நிதிக்காக மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இதனால், பெரிய நிறுவனங்கள் அரசுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். இந்த குழந்தைகளுக்கு உதவ பெரிய நிறுவனங்கள் முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement