கோயில் நகரங்களில் வேண்டும் வசதிகள்

ஸ்ரீவில்லிபுத்துார் : விருதுநகர் மாவட்டத்தில் அதிகளவு பக்தர்கள் வரும் கோயில்களில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

மாவட்டத்தில் இந்து சமய அறநிலைத்துறைக்கு உட்பட்ட ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில், சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில், இருக்கன்குடி மாரியம்மன் கோயில்களுக்கு உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி ஏராளமான வெளி மாவட்ட பக்தர்களும் வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் பக்தர்களுக்கு கோயிலை சுற்றி போதிய அடிப்படை சுகாதார வசதிகள், தங்குமிடங்கள் இல்லாமல் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

பல்வேறு வெளிமாவட்டங்களில் இருந்து ரயில்கள் மூலம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் மற்றும் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு அதிகாலையில் வரும் பக்தர்கள் தங்களது இயற்கை உபாதையை கழித்து விட்டு குளித்துச் செல்ல போதிய சுகாதார வளாக வசதிகள் இல்லை. இதே நிலைதான் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலிலும் காணப்படுகிறது.

அறநிலை துறைக்கு உட்பட்ட ஒவ்வொரு கோயில்களிலும் உண்டியல்கள் மூலம் பல லட்சம் ரூபாய் வருமானம் வரும் நிலையில் பக்தர்களுக்கு போதுமான அடிப்படை வசதிகள் செய்து தராத நிலையே பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. போதிய வருமானம் இருந்தும் வசதிகள் செய்து தருவதில் அறநிலை துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்றனர்.

எனவே, மாவட்ட நிர்வாகம் இப்பிரச்சனையில் தொடர் நடவடிக்கை எடுத்து கோயில் நகரங்களில் பக்தர்களுக்கு போதுமான அடிப்படை வசதிகளை முழு அளவில் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளியூர் பக்தர்களும் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement