இலவச சீருடைகள் தைப்பதற்கு நிர்ணயித்த கூலி கேட்டு போராட்டம்
விழுப்புரம்: விழுப்புரத்தில் பள்ளி சீருடைகள் தைப்பதற்கு, அரசு நிர்ணயித்த கூலியை வழங்க கோரி மகளிர் தையல் சங்க உறுப்பினர்கள் போராட்டம் நடத்தினர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டதும், 2025-26ம் கல்வி ஆண்டிற்கான அரசின் இலவச சீருடைகள் வழங்க உள்ளது. ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை, 1.25 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு சீருடைகள் வழங்கப்படும்.
இதற்கான துணிகள், சமூக நலத்துறை மூலம் மொத்தமாக கொள்முதல் செய்யப்பட்டு, அளவீடு செய்து, விழுப்புரம் கிழக்கு சண்முகபுரம் காலனியில் உள்ள மகளிர் தையல் தொழிற் கூட்டுறவு சங்கத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இச்சங்கத்தில் உள்ள 1,082 மகளிர் உறுப்பினர்களுக்கு, தலா 400 முதல் 450 சீருடைகள் தைப்பதற்கு, துணிகள் வழங்கப்பட்டது. தையல் கட்டணமாக கடந்தாண்டை விட 10 ரூபாய் உயர்த்தியுள்ளனர். மகளிர் தையல் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள், பள்ளிக்கே நேரில் சென்று மாணவ, மாணவிகளிடம் அளவு எடுத்து, துணிகளை தைத்தனர். முதல் செட் சீருடை தைத்து முடித்து, அவற்றை கூட்டுறவு சங்க அலுவலகத்தில் நேற்று ஒப்படைத்தனர்.
அப்போது, அரசு உயர்த்திய கூலி தொகையை வழங்கவில்லை. இதனால், தையல் சங்க உறுப்பினர்கள், சங்க அலுவலகத்தில் திடீர் போராட்டம் நடத்தினர். அப்போது, இந்தாண்டு அரசு நிர்ணயித்த கூலியை வழங்கவும், கேன்வாஷ், நூல்கள், பட்டன், ஜிப் உள்ளிட்ட பொருட்களை தரமாக வழங்க வேண்டும் என கோஷம் எழுப்பினர்.
தகவல் அறிந்து வந்த மாவட்ட சமூகநல அலுவலர் ராஜம்மாள், உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதால், அவர்கள், போராட்டத்தை கைவிட்டனர்.
மேலும்
-
சுற்றுலா பயணிகள், பக்தர்களை குறிவைத்து மோசடி; உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை
-
தமிழகத்தில் கைவினைத்திட்டம்: துவக்கினார் முதல்வர் ஸ்டாலின்
-
மே.வங்கத்தில் மனித தன்மையற்ற செயல்: தேசிய மகளிர் கமிஷன் கண்டனம்
-
வெள்ளியங்கிரி மலையில் பக்தர் உயிரிழப்பு
-
தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்; நயினார் நாகேந்திரன் உறுதி
-
தி.மு.க., நகராட்சி தலைவர் அறையில் புகுந்தது கட்டு விரியன் பாம்பு!