'கூட்டுறவு வங்கிகளில் 'டிபாசிட்' செய்ய வேண்டும்'

சென்னை:''மற்றொரு துறைக்கு சொந்தமான இடத்தில் மாநில கூட்டுறவு வங்கி கிளை அமைக்க முடியாது,'' என கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரிய கருப்பன் கூறினார்.

சட்டசபையில் நடந்த கேள்வி நேர விவாதம்:

காங்கிரஸ் - ஹசன் மவுலானா: தேசிய வங்கிகளில் கல்வி கடன் போதிய அளவில் தருவது இல்லை. மாணவர்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். கல்வி கடன் வாங்கிய பின் வேலை கிடைக்காத மாணவர்கள் தனியார் ஏஜன்சிகள் வாயிலாக நெருக்கடிக்கு ஆளாக்கப்படுகின்றனர். எனவே கூட்டுறவு வங்கிகள் வாயிலாக கல்வி கடன் வழங்க வேண்டும்.

அமைச்சர் பெரிய கருப்பன்: பொது மக்களுக்கு கூட்டுறவு வங்கி சேவைகள் சென்றடைய வேண்டும் என்பது நியாயமானது. கூட்டுறவு வங்கிகளிலும் கல்வி கடன் வழங்கப்படுகிறது; ஓரளவுதான் வழங்க முடியும்.

கூட்டுறவு வங்கிகளில் மக்கள் சேமிப்பை செலுத்த ஆர்வம் காட்ட வேண்டும். வங்கியில் உள்ள தொகைகளை வைத்துதான் கல்வி கடன், சிறுதொழில் கடன், மகளிர் சுயஉதவி குழுக்கள் கடன் வழங்க முடியும். எனவே கூட்டுறவு வங்கிகளில் 'டிபாசிட்' செய்வது குறித்து விழிப்புணர்வு பிரசாரமாக செய்ய முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு விவாதம் நடந்தது.

Advertisement