மேற்கு வங்க டிஸ்மிஸ் ஆசிரியர்களுக்கு பணி; மாணவர்களுக்காக உச்ச நீதிமன்றம் கரிசனம்

1

புதுடில்லி : மேற்கு வங்கத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட, 25,000 ஆசிரியர்களில், 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களை மட்டும் மாணவர்களின் நலனை கருத்தில் ெகாண்டு நிபந்தனையுடன் மீண்டும் பணியில் அமர்த்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் நியமனத்தில் முறைகேடு நடந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது.

இதையடுத்து, கடந்த 2016-ல் 25,000 பேர் நியமிக்கப்பட்டது செல்லாது என கொல்கட்டா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை, ஏப்.7-ல், உச்ச நீதிமன்றம் உறுதி செய்ததைத் தொடர்ந்து, 25,000 பேரும் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

இது, மம்தா அரசுக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், அரசு பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, தீர்ப்பை மறுபரிசீலனை செய்யுமாறு மேற்கு வங்க அரசு மற்றும் மேற்கு வங்க பள்ளி பணியாளர்கள் தேர்வு ஆணையம் உச்ச நீதிமன்றத்தை அணுகின.

இந்த வழக்கில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா நேற்று பிறப்பித்த உத்தரவு:

ஆசிரியர் பணி நியமனங்களில் நடந்த மிகப்பெரிய முறைகேட்டால், மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது. எனவே, 9, 10, 11, 12 ஆகிய வகுப்பு ஆசிரியர்களை மட்டும் புதியவர்கள் நியமிக்கும் வரை பணியில் தொடர நீதிமன்றம் அனுமதிக்கிறது.

ஆனால், குற்றச்சாட்டுக்கு உள்ளான ஆசிரியர்களை கண்டிப்பாக பணியில் அமர்த்தக் கூடாது. இந்த இடைக்கால நிவாரணமானது, முறைகேடுகளில் பெயர் இடம்பெறாத ஆசிரியர்களுக்கு மட்டுமே பொருந்தும். மேலும், ஆசிரியர் அல்லாத குரூப் - சி மற்றும் டி ஊழியர்களுக்கு பணி வழங்கக் கூடாது.

புதிய ஆசிரியர்கள் நியமனத்துக்கான அறிவிப்பை மே 31-க்குள் வெளியிட வேண்டும். அதன்பின், போட்டித் தேர்வு, நேர்முகத் தேர்வு உள்ளிட்ட அனைத்தையும் முடித்து டிச.,31-க்குள் புதிய ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும்.

புதிய நியமனம் குறித்த விரிவான அட்டவணை நகல் மற்றும் அது தொடர்பான பிரமாணப் பத்திரத்தை, மே 31-க்குள் மேற்கு வங்க அரசும், மேற்கு வங்க பள்ளி பணியாளர்கள் தேர்வு ஆணையமும் தாக்கல் செய்ய வேண்டும்.

புதிய நியமனத்துக்கான அறிவிப்பை வெளியிடத் தவறினால், அபராதம் உட்பட கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்க நேரிடும்.

இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement