காதலனுடன் சேர கணவனை கொன்று பாம்பு கடித்ததாக நாடகமாடிய மனைவி

மீரட் : உத்தர பிரதேசத்தில், காதலனுடன் நெருக்கமாக இருந்ததை கணவன் பார்த்து விட்டதால், அவரை காதலன் உதவியுடன் கழுத்தை நெரித்துக் கொலை செய்து, அவர் உடல் மீது உயிருள்ள பாம்பை விட்டு, பாம்பு கடித்து இறந்ததாக நாடக மாடிய மனைவியை போலீசார் நேற்று கைது செய்தனர்.
உத்தர பிரதேசத்தின் மீரட்டைச் சேர்ந்தவர் அமித், 25. இவரின் மனைவி ரவிதா. இருவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். அமித் தினக்கூலி வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 12ம் தேதி காலை, அவர் வீட்டு படுக்கையில் இறந்து கிடந்தார். இதைப் பார்த்து ரவிதா கூச்சல் போட்டார். அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தபோது அமித் மீது உயிருள்ள பாம்பு ஒன்று கொத்தியபடி இருந்தது. இதை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர்.
சம்பவம் குறித்து அறிந்த போலீசார் அமித் இறப்பில் சந்தேகமடைந்து உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில், அமித் உடலை பத்து முறை பாம்பு கடித்திருப்பது தெரிந்தது. ஆனால், பாம்பு கடிப்பதற்கு முன்பே அமித் கழுத்து நெரிக்கப்பட்டு இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அமித் மனைவி ரவிதாவிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது கணவரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது: அமித்தின் நண்பர் அமர்தீப்புக்கும், ரவிதாவுக்கும் இடையே கடந்த ஓராண்டாக பழக்கம் இருந்துள்ளது. இருவரும் ஒன்றாக இருந்ததை சமீபத்தில் அமித் பார்த்துள்ளார். இதையடுத்து கணவன் -- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் அமித்தை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார்.
இதற்கு காதலன் அமர்தீப் உதவியுள்ளார். அதன்படி கடந்த 12ம் தேதி இரவு அமித் வீட்டில் உறங்கியபோது, இருவரும் சேர்ந்து கழுத்தை நெரித்துக் கொன்றனர். கொலையை இயற்கை மரணம் போல் காட்ட 1,000 ரூபாய்க்கு பாம்பு ஒன்றை வாங்கி வந்து அமித் மீது போட்டுவிட்டு, ஒன்றும் தெரியாதது போல் காலையில் எழுந்து ரவிதா கூச்சல் போட்டுள்ளார்.
பாம்புகள் பொதுவாக மனிதரை ஒருமுறை கொத்தினால் அந்த இடத்திலிருந்து நகர்ந்து விடும் என வனத்துறையினர் தெரிவித்தனர். ஆனால் அமித் மரணத்தில் பாம்பு அவர் உடல் மீதே இருந்ததும், 10 முறைக்கு மேல் கொத்தியதும் சந்தேகத்தை கிளப்பியது. விசாரணையில் கொலை செய்யப்பட்டது உறுதியானது. இவ்வாறு அவர்கள் கூறினர்.








மேலும்
-
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: டில்லி, ஜம்மு காஷ்மீரில் குலுங்கிய கட்டடங்கள்
-
சுற்றுலா பயணிகள், பக்தர்களை குறிவைத்து மோசடி; உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை
-
தமிழகத்தில் கைவினைத்திட்டம்: துவக்கினார் முதல்வர் ஸ்டாலின்
-
மே.வங்கத்தில் மனித தன்மையற்ற செயல்: தேசிய மகளிர் கமிஷன் கண்டனம்
-
வெள்ளியங்கிரி மலையில் பக்தர் உயிரிழப்பு
-
தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்; நயினார் நாகேந்திரன் உறுதி