இரண்டாவது சுற்றில் சிந்து, பிரியான்ஷு * பாட்மின்டன் ஆசிய சாம்பியன்ஷிப்பில்

நிங்போ: பாட்மின்டன் ஆசிய சாம்பியன்ஷிப் தொடர் இரண்டாவது சுற்றுக்கு இந்தியாவின் சிந்து, பிரியான்ஷு, கிரண் முன்னேறினர்.
சீனாவில் பாட்மின்டன் ஆசிய சாம்பியன்ஷிப் 42வது சீசன் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் சிந்து ('நம்பர்-17'), 36வது இடத்திலுள்ள இந்தோனேஷியாவின் ஈஸ்டர் நுாருமியை சந்தித்தார். இதில் சிந்து 21-15, 21-19 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் அனுபமா, 13-21, 14-21 என தாய்லாந்தின் ரட்சனாக்கிடம் தோல்வியடைந்தார். இந்தியாவின் ஆகர்ஷி, 13-21, 7-21 என சீனாவின் ஹன்னிடம் வீழ்ந்தார். இந்தியாவின் மாளவிகா, 14-21, 8-21 என காவோவிடம் (சீனா) தோற்றார்.
லக்சயா தோல்வி
ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் உலகின் 'நம்பர்-16' வீரர், இந்தியாவின் லக்சயா சென், சீன தைபே வீரர் லீ சியாவோ ஹாவோவை ('நம்பர்-14') எதிர்கொண்டார். இதில் லக்சயா 18-21, 10-21 என தோல்வியடைந்தார்.
இந்தியாவின் முன்னணி வீரர் பிரனாய், சீனாவின் குவாங் ஜு லுாவிடம் 16-21, 21-12, 11-21 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். மற்றொரு முதல் சுற்றில் இந்தியாவின் கிரண் ஜார்ஜ், கஜகஸ்தானின் டிமிட்ரி பனாரினை 21-16, 21-8 என்ற நேர் செட்டில் வென்றார். பிரியான்ஷு, 20-22, 21-12, 21-10 என தாய்லாந்தின் கன்டபனை வீழ்த்தினார்.
ஆண்கள் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் ஹரிகரன், ரூபன் குமார் ஜோடி, 21-3, 21-12 என இலங்கையின் வீரசிங்கே, துலஞ்ஜனா ஜோடியை வென்றது. மற்றொரு போட்டியில் இந்தியாவின் கிருஷ்ணபிரசாத், புருத்வி ஜோடி, 19-21, 12-21 என தைவானின் ஹிசியாங் சியா, சி லின் வாங் ஜோடியிடம் தோல்வியடைந்தது.
பெண்கள் இரட்டையரில் இந்தியாவின் பிரியா, ஷ்ருதி ஜோடி, 11-21, 13-21 என தைவானின் சியன் யு, ஷூவோ சங் ஜோடியிடம் தோல்வியடைந்தது.