விடுப்பில் சென்ற மாநகராட்சி கமிஷனரால் பணிகள் தேக்கம்

காரைக்குடி 1988ம் ஆண்டு தேர்வு நிலையாக தரம் உயர்த்தப்பட்டு, 2013ம் ஆண்டு முதல் சிறப்பு நிலை நகராட்சியாக செயல்பட்டு வந்தது. நகராட்சியின் பரப்பளவு 13.75 சதுர கி.மீ., மக்கள் தொகை 1 லட்சத்து 31 ஆயிரத்து 120, ஆண்டு வருமானம் 47.48 கோடியாக இருந்தது. 36 வார்டுகளுடன் செயல்பட்டு வந்த காரைக்குடி நகராட்சியை, மாநகராட்சியாக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.

தமிழகத்தில் புதுக்கோட்டை நாமக்கல் திருவண்ணாமலை காரைக்குடி உட்பட 4 நகராட்சிகள் மாநகராட்சியாக கடந்த ஆண்டு தரம் உயர்த்தப்பட்டது. கோட்டையூர், கண்டனுார் பேரூராட்சிகள், சங்கராபுரம், இலுப்பக்குடி, அரியக்குடி, கோவிலுார், மானகிரி ஊராட்சிகள் இணைக்கப்பட்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம், காரைக்குடி மாநகராட்சியின் மொத்த பரப்பளவு 85. 68 ச.கி.மீ., ஆகவும், மொத்த மக்கள் தொகை, 2 லட்சத்து 45 ஆயிரத்து 406 ஆகவும், ஆண்டு வருமானம் ரூ.65.61 கோடியாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

வரி உயர்வால் ஆர்ப்பாட்டம்



காரைக்குடி மாநகராட்சியில் சொத்துவரி பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக கூறி வணிகர்களும் பொதுமக்களும் புகார் எழுப்பினர். மேலும், வரி வசூல் செய்யும் அதிகாரிகள் வணிகர்களையும், பொதுமக்களையும் அச்சுறுத்தும் வகையில் மிரட்டுவதாக கூறி மார்ச் 28ல் கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.

நீண்ட விடுப்பில் சென்ற கமிஷனர்



காரைக்குடி மாநகராட்சியில், வரி வசூல் பணியில் கமிஷனர் சித்ரா தலைமையில் அதிகாரிகள் தீவிரம் காட்டினர். நிலுவை தொகை அதிகம் இருந்ததால் வரிவசூலில் கெடுபிடி செய்யப்பட்டதால் பல்வேறு போராட்டங்கள் நடந்தது. அதனைத் தொடர்ந்து மாநகராட்சி கமிஷனர் சித்ரா 15 நாட்களுக்கும் மேலாக நீண்ட விடுப்பில் சென்றுள்ளார். மாநகராட்சியில், பல்வேறு அடிப்படை பணிகள் முடங்கி கிடக்கிறது. புதிதாக சேர்க்கப்பட்ட ஊராட்சி ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

தற்போது, புதுக்கோட்டை கமிஷனர் கூடுதல் பொறுப்பாக காரைக்குடிக்கு நியமிக்கப்பட்டாலும் வாரத்திற்கு ஒரு சில நாட்கள் மட்டுமே வந்து செல்வதால் முறையாக பணிகளை கவனிக்க முடிவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது.

மாநகராட்சி மாநகர் நல அலுவலர் வினோத் ராஜா கூறுகையில்: கமிஷனர் விடுப்பில் சென்றதால் தற்போது புதுக்கோட்டை கமிஷனர் கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார். ஊராட்சி ஊழியர்களுக்கு நேற்று சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. பிற பணிகளும் முறையாக நடந்து வருகிறது,என்றார்.

காரைக்குடி, ஏப்.18-

காரைக்குடியில் நடந்த கடையடைப்பு போராட்டத்தை தொடர்ந்து மாநகராட்சி கமிஷனர் நீண்ட விடுப்பில் சென்றதால் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

Advertisement