விடைத்தாள் திருத்த நாங்க ரெடி; அழைப்பு இல்லை என மெட்ரிக் ஆசிரியர்கள் அதிருப்தி

மதுரை : பொதுத் தேர்வுகளுக்கான விடைத்தாள் திருத்தும் பணிக்கு மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் தயாராக இருந்தும் அதிகாரிகள் அழைக்கவில்லை என அதிருப்தி எழுந்துள்ளது.

பிளஸ் 2, பிளஸ் 1 பொதுத் தேர்வு முடிந்துள்ளது. தற்போது பத்தாம் வகுப்பு தேர்வு நடக்கிறது. மேல்நிலைத் தேர்வுகளை 16 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர். மே 9 ல் பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப விடைத்தாள் திருத்தும் பணிகளை துரிதப்படுத்த கல்வித்துறை முயற்சி மேற்கொண்டுவருகிறது.

இதற்காக மாவட்டத்திற்கு குறைந்தது 2 விடைத்தாள் திருத்தும் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. குறைந்தது 40 ஆயிரம் வரை ஆசிரியர்கள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் ஆசிரியர்கள் தேவை உள்ளது என முகாம் பொறுப்பு அதிகாரிகள் புலம்புகின்றனர். இதற்கு காரணம், மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் பலர் பங்கேற்கவில்லை எனவும் அவர்களை உரிய முறையில் அழைக்கவில்லை எனவும் இருவேறு தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:

பொதுத் தேர்வு பணிக்கு மெட்ரிக் பள்ளிகளின் ஆசிரியர்கள் வருகை பதிவேட்டை கல்வி அதிகாரிகள் பெற்று அதில் உள்ள ஆசிரியர்கள் பெயரை குறிப்பிட்டு பணிகள் ஒதுக்கீடு செய்தனர். ஆனால் விடைத்தாள் திருத்தும் பணிக்கு பள்ளிகளுக்கு அனுப்பிய உத்தரவில், 'பி.ஜி., ஆசிரியர்களை முகாம் பணிக்கு அனுப்பி வையுங்கள்' என மட்டுமே குறிப்பிட்டிருந்தனர்.

இதனால் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு தான் முன்னுரிமை இருக்கும் என நினைத்து பள்ளி நிர்வாகம் எங்களை இந்தாண்டு விடுவிக்கவில்லை. ஆனால் பங்கேற்க நாங்கள் தயாராகவே உள்ளோம்.

ஆனால் நாங்கள் மறுப்பதாக தகவல் பரவுகிறது. எனவே இன்றிலிருந்தாவது விடைத்தாள் திருத்தும் பணிக்கு மெட்ரிக் ஆசிரியர்களையும் பயன்படுத்த கல்வி அதிகாரிகள் முன்வர வேண்டும் என்றனர்.

Advertisement