கள ஆய்வுக்கு ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய ஏட்டு கைது

2


போத்தனூர்: கோவை, பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கான கள ஆய்வுக்கு ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய போலீஸ் ஏட்டு, லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
போத்தனூர் அடுத்த செட்டிபாளையத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் தனது மற்றும் தனது மனைவியின் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க விண்ணப்பித்திருந்தார்.

பாஸ்போர்ட் அலுவலகத்திலிருந்து, செட்டிபாளையம் போலீஸ் ஸ்டேஷனுக்கு முகவரி உள்ளிட்ட விபரம் சரிபார்ப்புக்கு, விண்ணப்ப விபரம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, போலீஸ் ஸ்டேஷன் ரைட்டர் ஏட்டு ரமேஷ், கிருஷ்ணமூர்த்தியை தொடர்புகொண்டு கூறியுள்ளார். அப்போது ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.

அதிர்ச்சியடைந்த கிருஷ்ணமூர்த்தி, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் செய்தார். கூடுதல் எஸ்.பி., திவ்யா அறிவுறுத்தலில், நேற்று மாலை செட்டிபாளையம் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற கிருஷ்ணமூர்த்தி, ரசாயனம் தடவிய இரு, 500 ரூபாய் நோட்டுக்களை ரமேஷிடம் கொடுத்தார்.

அப்போது அங்கு மறைந்திருந்த, இன்ஸ்பெக்டர்கள் லதா, ஷீலா தலைமையிலான ஏழு பேர் கொண்ட, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரை பிடித்தனர்.

தொடர்ந்து, கூடுதல் எஸ்.பி., திவ்யா முன்னிலையில், போலீசார் விசாரணை நடத்தி, வாக்குமூலம் பெற்றனர். இரவு, 9:30 மணியை கடந்தும் இப்பணி நீடித்தது.

ரமேஷ் லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் சிக்கியது, இதர போலீசாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. லஞ்ச ஒழிப்புத்துறையினரின் இந்நடவடிக்கையின்போது, புகார் கொடுக்க வந்தவர்கள் உள்ளே அனுமதிக்கப்படாமல், திருப்பி அனுப்பப்பட்டனர்.

Advertisement