உயரம் குறைந்த மாற்றுத்திறனாளிகள் சென்னையில் காத்திருப்பு போராட்டம்

சென்னை : தமிழ்நாடு உயரம் குறைந்தவர்கள் நலச் சங்கம் சார்பில், எட்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று சென்னையில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.
காமராஜர் சாலையில் உள்ள, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலகத்தில், சங்கத் தலைவர் ராகுல் தலைமையில் நடந்த போராட்டத்தில், சங்க உறுப்பினர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, கோஷங்கள் எழுப்பினர்.
போராட்டம் குறித்து, ராகுல் கூறியதாவது:
மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டம் 2016ன் படி, உயரம் குறைபாடுடையவர்களும், 21 வகை மாற்றுத்திறனாளிகளில் ஒருவராக அடையாளப்படுத்தப்பட்டு உள்ளோம்.
ஆனால், அரசு தரப்பில், உதவித் தொகையாக மாதம் 1,500 ரூபாய் மட்டும் வழங்கப்படுகிறது. வேறு எந்த நலத்திட்டங்களும், கடந்த ஒன்பது ஆண்டுகளாக எங்களுக்கு வழங்கப்படவில்லை.
தற்போது அரசு, செவி குறைபாடு உடையோருக்கு, அவர்களுக்கான கருவியை வழங்குகிறது. அதேபோல், பார்வையற்றோருக்கு உபகரணங்கள், போலியோவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாற்காலி, மூன்று சக்கர வாகனம் உள்ளிட்ட நலத் திட்டங்கள் வழங்கப்படுகின்றன. உயரம் குறைபாடு உள்ளவர்களுக்கு, எதுவும் வழங்கப்படவில்லை.
இது குறித்து, மாற்றுத்திறனாளி நலத்துறை ஆணையர் முதல் செயலர் வரை பலமுறை சந்தித்து விட்டோம். அவர்கள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, மற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்குவதுபோல், எங்களுக்கும் மூன்று சக்கர வாகனம், அரசு வேலையில் முன்னுரிமை, இலவச பேருந்து பயணம் அட்டை வழங்க வேண்டும்.
எங்களில் கலைத்துறையை சேர்ந்தவர்களுக்கு, நடிகர் சங்கத்தில் இலவச உறுப்பினர் அட்டை வழங்க பரிந்துரைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். அரசு இதை, பரிசீலனை செய்து, வரும் மானிய கோரிக்கையில் அறிவிக்கும் வரை போராட்டம் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
கேபிள் கார் அறுந்து விழுந்து விபத்து; இத்தாலியில் 4 பேர் பரிதாப பலி
-
சிறந்த திறமை, சிறந்த பிரதமர்: இத்தாலி பிரதமர் மெலோனியை பாராட்டிய டிரம்ப்!
-
ஜொலிக்கும் ராகுல் தவிக்கும் ஆர்.சி.பி.,
-
40வது தேசிய இளைஞர் கூடைப்பந்து போட்டி 2ம் இடம் பிடித்த கர்நாடக பெண்கள் அணி
-
12,500 அடி உயரம் கொண்ட கேதார்கந்தா மலை உச்சியை அடைந்த 8 வயது சிறுமி
-
கார் ரேசில் சாதனை படைக்கும் கர்ணா கடூர்