'9,000 குறு, சிறு தொழில் நிறுவனங்கள் மூடப்படவில்லை'

சென்னை : ''தமிழகத்தில், 9,000 குறு, சிறு தொழில் நிறுவனங்கள் மூடப்படவில்லை. 'உதயம்' இணையதளத்தில் பதிவை மட்டுமே ரத்து செய்துள்ளன,'' என குறு, சிறு தொழில்கள் துறை அமைச்சர் அன்பரசன் தெரிவித்தார்.

சட்டசபையில் நடந்த விவாதம்:

அ.தி.மு.க.,- ஜெயராம்: தமிழகத்திற்கு தொழில் முதலீடுகள் வந்ததால், 2.50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதாக, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தி.மு.க., ஆட்சியில், 9,000 குறு, சிறு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. புதிய நிறுவனங்களுக்கான, 'உதயம்' இணையதளத்தில், பதிவு குறைந்துள்ளது.

முதல்வரின் வெளிநாட்டு சுற்றுப்பயணம், உலக முதலீட்டாளர் மாநாடு வாயிலாக, 6 லட்சம் கோடி ரூபாய் முதலீடு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், குறு, சிறு தொழில் துறைக்கு எவ்வளவு முதலீடு வந்துள்ளது என்ற விபரம் வேண்டும்.

மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாகவும், வட மாநிலங்களில் தொழில்கள் வளர்ச்சி பெறுவதாலும், தமிழகத்தில் குறு, சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மின்கட்டண உயர்வால், குறு தொழில் நிறுவனங்கள், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. விசைத்தறியாளர்கள் 1.50 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அமைச்சர் அன்பரசன்: உதயம் இணையதளத்தில் பதிவு செய்த, குறு, சிறு தொழில் நிறுவனங்களிடம், கொள்முதல் செய்வதை, பெரிய நிறுவனங்கள் தவிர்த்து வருகின்றன. உதயம் பதிவை ரத்து செய்ய வற்புறுத்துகின்றன. இதனால், ஒரு சில குறு,சிறு நிறுவனங்கள் உதயம் பதிவை ரத்து செய்துள்ளன.

அந்நிறுவனங்கள் தொடர்ந்து இயங்குகின்றன. பதிவை ரத்து செய்ததை கணக்கில் எடுத்துக் கொண்டு, நிறுவனங்கள் மூடப்பட்டதாகக் கூற முடியாது. உச்சநேர மின் நுகர்வு கட்டண மானியமாக, 595 கோடி ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு, பெரும் பங்காற்றும் குறு, சிறு தொழில் நிறுவனங்களை பாதுகாக்க, அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது.

இவ்வாறு விவாதம் நடந்தது.

Advertisement