ரஷ்யாவுக்கு வாருங்கள்; மோடிக்கு புடின் அழைப்பு

மாஸ்கோ : இரண்டாம் உலகப்போரில் ரஷ்யா வெற்றி பெற்றதன், 80வது ஆண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு ரஷ்ய அதிபர் புடின் அழைப்பு விடுத்துள்ளார்.
சோவியத் யூனியன் - ஜெர்மனியின் நாஜி படைகள் இடையே கடந்த, 1941 - 45 வரை போர் நடந்தது. இந்த இரண்டாம் உலகப்போரில், எவ்வித நிபந்தனையும் இன்றி நாஜி படைகள், சோவியத் யூனியனிடம் சரண் அடைந்தன. இந்த வெற்றியை ஆண்டுதோறும் மே 9ம் தேதி ரஷ்யா கொண்டாடி வருகிறது.
இதன், 80ம் ஆண்டு வெற்றி விழா கொண்டாட்டம், அடுத்த மாதம் 9ம் தேதி தலைநகர் மாஸ்கோவில் நடக்கவுள்ளது. இதில் பங்கேற்க நட்பு நாடுகளின் தலைவர்களுக்கு ரஷ்யா அழைப்பு விடுத்துள்ளது. அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அழைப்பு விடுத்துள்ளார்.
இதை ரஷ்ய வெளியுறவுத்துறை இணையமைச்சர் ஆண்ட்ரி ருடென்கோ நேற்று உறுதி செய்தார். பிரதமர் மோடி கடந்த ஆண்டு ஜூலை மாதம் ரஷ்யா சென்றார். அப்போது அதிபர் புடினை நம் நாட்டிற்கு வரும்படி அழைப்பு விடுத்தார்.
அதை புடின் ஏற்றுக் கொண்டார். இருப்பினும், அவரது வருகைக்கான தேதிகள் இன்னும் முடிவாகவில்லை. இந்நிலையில் அந்நாட்டின் வெற்றி விழா கொண்டாட்டத்தில் பங்கேற்க ரஷ்யா அழைப்பு விடுத்துள்ளது. ரஷ்யா - உக்ரைன் போரில் இந்தியாவின் நடுநிலையான செயல்பாட்டின் நடுவே மோடிக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.