ஓய்வு பெறும் நாளில் கைதான லஞ்ச அதிகாரி

ஷிவமொக்கா: 'ஸ்மார்ட் சிட்டி' திட்ட அதிகாரி ஒருவர், ஓய்வு பெறும் நாளன்றே லஞ்சத்துக்கு ஆசைப்பட்டு, லோக் ஆயுக்தாவிடம் சிக்கினார்.

ஷிவமொக்கா நகரின் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத் தலைவராக பணியாற்றியவர் கிருஷ்ணப்பா. இவர் நேற்று பணியில் இருந்து ஓய்வு பெற்றார். அவர், ஷிவமொக்கா மாநகராட்சி கமிஷனரிடம், பொறுப்பை மாற்றித் தர வேண்டி இருந்தது.

ஷிவமொக்கா நகரில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் எல்.இ.டி., திரை பொருத்த ஒப்பந்தம் பெற்றிருந்த மும்பை நிறுவனத்துக்கு பில் தொகையை வழங்க கிருஷ்ணப்பா 1 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டிருந்தார்.

'பணம் கொடுக்காவிட்டால் மும்பை நிறுவனம் சரியாக பணியாற்றவில்லை' என, அறிக்கை தாக்கல் செய்யப் போவதாக கிருஷ்ணப்பா மிரட்டினார். அந்நிறுவனம் பணம் கொடுக்க சம்மதித்தது. இது தொடர்பாக லோக் ஆயுக்தாவில் புகார் அளித்தது.

பணியின் கடைசி நாளான நேற்று, கிருஷ்ணப்பா அலுவலகத்தில் நிறுவனத்தினர் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தனர்.

அப்போது அங்கு வந்த லோக் ஆயுக்தா போலீசார், கிருஷ்ணப்பாவை கையும், களவுமாக பிடித்தனர்.

பணத்தையும் கைப்பற்றினர். பணத்தாசையால் பணியில் இருந்து ஓய்வு பெறும் நாளன்றே, லோக் ஆயுக்தாவிடம் கிருஷ்ணப்பா சிக்கினார்.

Advertisement