ஏ.டி.எம்.,மில் ரூ.18 லட்சம் கொள்ளை

கலபுரகி: காஸ் கட்டரை பயன்படுத்தி, ஏ.டி.எம்.,மில் 18 லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.

கலபுரகி டவுன் பூஜாரி சவுக் பகுதியில் எஸ்.பி.ஐ., வங்கிக்கு சொந்தமான, ஏ.டி.எம்., மையம் உள்ளது. இந்த மையத்திற்கு காவலாளி இல்லை.

நேற்று அதிகாலை 2:00 மணிக்கு ஏ.டி.எம்., மையத்திற்கு, குல்லா அணிந்து வந்த மர்ம நபர்கள், கண்காணிப்பு கேமராக்கள் மீது கருப்பு மை ஸ்பிரே அடித்தனர்.

பின், காஸ் கட்டரை பயன்படுத்தி, ஏ.டி.எம்., இயந்திரத்தை வெட்டினர். அதற்குள் இருந்த பணத்தைத் கொள்ளை அடித்துவிட்டு, அங்கிருந்து தப்பினர்.

நேற்று காலை பொதுமக்கள் ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்க வந்தபோது, கொள்ளை நடந்தது தெரியவந்தது. தகவல் அறிந்த கலபுரகி போலீஸ் கமிஷனர் சரணப்பா மற்றும் வங்கி ஊழியர்கள் அங்கு வந்தனர்.

முதற்கட்ட விசாரணையில் ஏ.டி.எம்.,மில் இருந்து 18 லட்சம் ரூபாய் கொள்ளை போனது தெரிந்தது.

நேற்று முன்தினம் மாலை தான் ஏ.டி.எம்.,மில் 15 லட்சம் ரூபாய் நிரப்பப்பட்டது. இதை நன்கு அறிந்தவர்களே கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்று, சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. இதனால் ஏ.டி.எம்.,மில் பணம் நிரப்பிய, தனியார் நிறுவன ஊழியர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Advertisement