பா.ஜ., தொண்டர் வினய் குடும்பத்தினரிடம் விசாரிக்க முடிவு

பெங்களூரு: தற்கொலை செய்த பா.ஜ., தொண்டர் வினய் சோமய்யா குடும்பத்தினரிடம் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
குடகு சோமவார்பேட் தாலுகா கோனிமரூர் கிராமத்தின் வினய் சோமய்யா, 35. பா.ஜ., தொண்டரான இவர், பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக வேலை செய்தார்.
கடந்த 4ம் தேதி அதிகாலை தான் வேலை செய்த நிறுவனத்தில், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
முன்னதாக அவர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட கடிதத்தில், 'என் சாவுக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் பொன்னண்ணா, மந்தர் கவுடா, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் தென்னிரா மஹினா ஆகியோரின், தொல்லை காரணம்' என குறிப்பிட்டிருந்தார்.
தென்னிரா மஹினா மீது மட்டும், ஹென்னுார் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவரை இன்னும் விசாரணைக்கு அழைக்கவில்லை.
இதற்கிடையில் வினய் சோமய்யாவின் பிரேத பரிசோதனை அறிக்கை, போலீசாருக்கு நேற்று கிடைத்துள்ளது. அதில் அவர் துாக்கிட்டுத் தற்கொலை செய்ததாகவும், எத்தனை மணிக்கு என்றும் குறிப்பிடப்பட்டிருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையடுத்து பிரேத பரிசோதனை அறிக்கையில் உள்ள நேரம், சமூக வலைத்தளத்தில் அவர் பதிவிட்ட கடிதம் குறித்த நேரத்தை போலீசார் ஒப்பிட்டு பார்த்தனர்.
மேலும் வினய்க்கு வேறு ஏதாவது பிரச்னை இருந்ததா என்பது குறித்து, அவரது குடும்பத்தினரிடம் விசாரிக்கவும் முடிவு செய்துள்ளனர்.




