மனதை மயக்கும் ஹேமகிரி மலை

நகரங்களின் சத்தம், பரபரப்புக்கு இடையே, ஓய்வின்றி உழைக்கும் மக்கள், விடுமுறை கிடைத்தாலும் நகரை விட்டு சிறிது தொலைவு சென்று பொழுது போக்க விரும்புவர். தினமும் நெருக்கடியில் வாழும் மக்களை, இயற்கை எழில் மிகுந்த இடங்கள் சுண்டி இழுக்கின்றன. இவற்றில் ஹேமகிரி மலையும் ஒன்றாகும்.
கண்களுக்கு விருந்தளிக்கும் இயற்கை காட்சிகள் நிறைந்த மலை, அதன் மீது புராதன கோவில், சலசலவென இசை எழுப்பிய படி பாயும் ஆறு, ஆற்றின் இசையை கடந்து, காதில் கேட்கும் கோவில் மணி ஓசை, சுற்றிலும் தென்னை மரங்கள், பசுமை காட்சிகளை காண விரும்பினால், ஹேமகிரி மலைக்கு வாருங்கள். இங்கு வந்தால் சொர்க்கத்துக்கு வந்ததை போன்ற உணர்வு தோன்றும்.
மாண்டியா மாவட்டம், கே.ஆர்.பேட் தாலுகாவில் புராண பிரசித்தி பெற்ற ஹேமகிரி மலை உள்ளது. இது அழகான சுற்றுலா தலம் மட்டுமல்ல, ஆன்மிக தலமாகவும் விளங்குகிறது.இங்கு பிருகு ரிஷி தவம் செய்த திருத்தலமாகும்.
வைகுண்டத்தில் மஹாலட்சுமி தேவியுடன் கோபித்து கொண்டு, அவரது சாபத்துக்கு ஆளாகி பூலோகம் வரும் ஸ்ரீஹரி, இதே மலையில் வசித்தாராம்.
இந்த மலையில் சாப விமோசனம் கிடைத்து, மஹாலட்சுமி மற்றும் பத்மாவதி தேவியை திருமணம் செய்து கொண்டு, கல்யாண வெங்கடசுவாமியாக நிலை நின்றார்.
வாழ்க்கையில் தொடரும் கஷ்டத்தால், மனம் நொந்தவர்கள் இந்த கோவிலுக்கு வந்து, பிரார்த்தனை செய்து வேண்டினால், கஷ்டங்கள் நிவர்த்தியாகி, வாழ்க்கை வளமாகும் என்பது ஐதீகம். ஹேமகிரி மலையை சுற்றிலும், ஹேமாவதி ஆறு பாய்கிறது. இங்கிருந்து மேற்கு முகமாக பாய்ந்து, கே.ஆர்.எஸ்., அணை உப்பங்கழியை ஒட்டியுள்ள காவிரி ஆற்றுடன் சங்கமமாகிறது.
ஹேமாவதி ஆறு பாய்வதால், வறண்டு கிடந்த நெல், கரும்பு, தென்னை, பாக்கு உட்பட, பல விளைச்சல்கள் செழிப்பாக வளர்கின்றன.
ஹேமகிரி மலையை பற்றி கூறுவதானால், இது இயற்கை எழில் கொட்டி கிடக்கும் சுற்றுலா தலமாகும்.
ஹேமாவதி ஆற்றுக்கு குறுக்கே 1880ல், 415 மீட்டர் நீளமான அணை கட்டப்பட்டது. இங்கு புராதன காலத்து கோட்டை உள்ளது. ஆனால் இக்கோட்டை சிதிலமடைந்துள்ளது. இப்பகுதியில் பல விதமான பறவைகள் அடைக்கலம் பெற்றுள்ளன.
ஹேமகிரி மலை மற்றும் கல்யாண வெங்கட ரமணசுவாமி கோவிலுக்கு வரும் சுற்றுலா பயணியர், பக்தர்களுக்கு போதுமான அடிப்படை வசதிகள் இல்லாதது, பிரச்னையை ஏற்படுத்துகிறது. குடிநீர் உட்பட மற்ற அடிப்படை வசதிகள் செய்தால், சுற்றுலா பயணியர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.
மாண்டியாவுக்கு வரும் சுற்றுலா பயணியர், ஹேமகிரி மலைக்கு வர மறப்பது இல்லை. வார இறுதி நாட்களில் ஏராளமாக வருகின்றனர்.
வாழ்க்கையில் பார்த்து ரசிக்க வேண்டிய இடங்களில், ஹேமகிரியும் ஒன்றாகும். கோடை விடுமுறையில் குடும்பத்துடன் சுற்றுலா செல்லும் திட்டம் இருந்தால், ஹேமகிரி மலையையும் சேர்த்து கொள்ளுங்கள்.
மாண்டியா மாவட்டம், கே.ஆர்.பேட்டில் இருந்து, 10 கி.மீ., தொலைவில், ஹேமகிரி மலை அமைந்துள்ளது. மாண்டியாவில் இருந்து, 65 கி.மீ., மைசூரில் இருந்து 70 கி.மீ.,பெங்களூரில் இருந்து, 165 கி.மீ., தொலைவிலும் ஹேமகிரி மலை உள்ளது. அனைத்து நகரங்களில் இருந்தும், கே.ஆர்.பேட்டுக்கு அரசு, தனியார் பஸ்கள், ரயில்கள் இயக்கப்படுகின்றன. வாடகை வாகன வசதியும் உள்ளது. அருகில் உள்ள சுற்றுலா தலங்கள்: கே.ஆர்.எஸ்., அணை பிருந்தாவனம், மேல்கோட்டே வன விலங்குகள் சரணாலயம், வரலாற்று பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கபட்டணா.
- நமது நிருபர் -
மேலும்
-
தந்தையின் இறுதி சடங்கில் காதலியை கரம்பிடித்த மகன்
-
அண்ணா மறுமலர்ச்சி திட்டப்பணி டெண்டர்: ஐகோர்ட் இடைக்கால தடை
-
மவுண்ட் பார்க் பள்ளியில் 'ஸ்காலர்ஷிப்' தகுதி தேர்வு
-
கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளியில் கல்விக் கட்டண சலுகைக்கு தேர்வு
-
பள்ளி சமையல் கூடத்தில் காஸ் கசிந்து தீ விபத்து சமையலர் உள்ளிட்ட 3 பேர் காயம்
-
கள்ளச்சாராய வழக்கில் மேலும் மூவர் கைது