விவாகரத்து வழக்கில் மகளின் வாக்குமூலத்தால் திருப்பம் தாய், கள்ளக்காதலன் மீது வழக்கு

திருவனந்தபுரம்,:கேரளாவில் குடும்ப நல நீதிமன்றத்தில் நடந்த விவாகரத்து வழக்கின் போது மகள் அளித்த வாக்குமூலத்தால் தாய் மற்றும் கள்ளக்காதலன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கேரளமாநிலம் திருவனந்தபுரம் அருகே போத்தன்கோட்டை சேர்ந்த ஒரு தம்பதிக்கிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இவர்களுக்கு 11 வயதில் மகள் உள்ளார். இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் விவாகரத்து கேட்டு திருவனந்தபுரம் குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இது தொடர்பாக கணவன், மனைவி,மகள் என அனைவரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது.

மகள் அளித்த வாக்கு மூலத்தில் '' தனது தாய்க்கு ஆண் நண்பர் ஒருவர் இருப்பதாகவும், தந்தை இல்லாத நேரத்தில் தாயைப் பார்க்க வீட்டிற்கு வந்து சென்ற அவர் தன்னிடமும் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். தனது தாயிடம் இது பற்றி தெரிவித்ததாகவும், அது பற்றி யாரிடமும் கூறக்கூடாது என்று தாய் கூறிவிட்டதாகவும்'' குறிபிட்டுள்ளார்.

இதை தொடர்ந்து குடும்ப நல நீதிமன்றத்தின் உத்தரவு படி சிறுமியின் தாய் மற்றும் கள்ளக்காதலன் மீது வஞ்சியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சம்பவம் நடந்த இடம் போத்தன்கோடு என்பதால் வழக்கு அங்கு மாற்றப்படுகிறது.

Advertisement