சக்கர நாற்காலி டென்னிஸ்   ஜமாய்க்கும் போனிபேஷ் பிரபு

வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று நினைக்கும் மாற்று திறனாளிகள் தங்களுக்கு உள்ள குறைபாட்டை பெரிய விஷயமாக நினைப்பது இல்லை. சாதனை இலக்கை எப்படி அடைவது என்பது மட்டும் குறிக்கோளாக இருக்கும். இவர்களில் ஒருவர், பெங்களூரின் போனிபேஷ் பிரபு, 52. சக்கர நாற்காலி டென்னிஸ் வீரரான அவர், அந்த விளையாட்டில் நிறைய சாதனை படைத்து உள்ளார்.

இத்தனைக்கும், அவர் பிறக்கும் போதே மாற்று திறனாளி இல்லை. 4 வயதில் இடுப்பு பகுதியில் ஏற்பட்ட ஒரு குறை அவரை 'குவாட்ரிப்லெஜிக்' நோயாளியாக மாற்றியது. ஆனாலும், போனிபேஷ் பிரபு, அவரது பெற்றோர் பிரபு - பாத்திமா சிறப்பு குழந்தை போன்று பார்க்கவில்லை. விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க போனிபேஷ் பிரபுவை அனுப்பினர்.

போனிபேஷுக்கு சிறு வயதில் இருந்தே டென்னிஸ் மீது ஆர்வம் அதிகமாக இருந்தது. டென்னிஸ் வீரர்கள் இவான் லென்ட்ல், ஜான் மெசென்ரோ ஆகியோரின் தீவிர ரசிகராக இருந்தார். கடந்த 1997 ஆண்டு முதல் சக்கர நாற்காலியில் டென்னிஸ் பயிற்சி எடுத்தார். கடந்த 1998ல் முதல்முறையாக அமெரிக்க ஓபன் சக்கர நாற்காலி டென்னிஸ் போட்டியில் பங்கேற்றார். அங்கு துவங்கிய விளையாட்டு பயணம் இப்போது வரை நீடித்து வருகிறது. தொழில் முறையாக 11 பட்டம் வென்று உள்ளார்.

சக்கர நாற்காலி டென்னிஸ் மட்டுமின்றி தடகளம், பேட்மின்டன், ஈட்டி எறிதல், டேபிள் டென்னிஸ் ஆகிய போட்டிகளிலும் சர்வதேச அளவில் பங்கேற்று இருக்கிறார். சர்வதேச பாரா ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியரும் போனிபேஷ் தான். விளையாட்டு துறையில் இவர் படைத்த சாதனையை பாராட்டும் வகையில், 2014 ம் ஆண்டு மத்திய அரசு 'பத்மஸ்ரீ' விருது வழங்கியது.


பிரதிபா பூஷன் விருதும் பெற்று உள்ளார். கர்நாடக அரசு ராஜ்யோத்சவா, ஏகலைவா விருதும் வழங்கியது. தற்போது இந்திய சக்கர நாற்காலி விளையாட்டு போட்டிகளின் துாதராக உள்ளார். உடல், அறிவு ரீதியாக மாற்று திறனாளிகளை ஊக்குவிக்கும் வகையில் போனிபேஷ் பிரபு, சக்கர நாற்காலி டென்னிஸ் அகாடமியையும் நடத்தி வருகிறார்.

- நமது நிருபர் -

Advertisement