அசாமிடம் தோல்வி அடைந்த கர்நாடக கால்பந்து பெண்கள் அணி

'டிரீம் ஸ்போர்ட்ஸ்' பெண்கள் கால்பந்து சாம்பியன்ஷிப் - 2025 போட்டி கோவாவில் நடந்து வருகிறது. இப்போட்டியில் 17 வயதிற்குட்பட்ட சிறுமியர், பல மாநிலங்களில் இருந்தும் கலந்து கொண்டனர்.

இதில் கர்நாடக பெண்கள் கால்பந்து அணியும் கலந்து கொண்டது. நேற்று முன்தினம் கோவாவின் எஸ்.ஏ.ஜி., பெனலியம் மைதானத்தில் நடந்த போட்டியில், கர்நாடக அணி, அசாம் அணியை எதிர்கொண்டது.

பலம் வாய்ந்த இரு அணிகள் மோதும் போட்டி என்பதால், துவக்கம் முதல் இறுதி வரை களத்தில் பரபரப்பு காணப்பட்டது. அசாம் அணியின் வீராங்கனைகள் கோல் அடிப்பதில் மும்முரமாக செயல்பட்டனர்.

இதன் காரணமாக, போட்டி ஆரம்பித்த, எட்டாவது நிமிடத்திலேயே அசாம் அணியின் கரினா நராஹ் கோல் அடித்து அசத்தினார். இதனால், கர்நாடக அணியும் கோல் அடிக்க தொடர்ந்து முயற்சித்தது.

கோல் அடிக்க மும்முரமாக செயல்பட்டதால், தடுப்பாட்டத்தில் கவனத்தை சிதற விட்டது. இதை சரியாக பயன்படுத்தி கொண்ட, அசாமின் செர்பிரிக்கா தெரங்பி 35வது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார்.

ஆட்டத்தின் முதல் கால் பகுதியில் இரண்டு கோல்களை அசாம் அடித்தது. இது, கர்நாடக அணிக்கு தேக்கத்தை ஏற்படுத்தியது. இதை சரியாக பயன்படுத்தி கொண்ட, அசாம் வீராங்கனைகள் தடுப்பு ஆட்டத்தில் தீவிரமாக இறங்கினர்.


இதன் காரணமாக, கர்நாடக அணி இரண்டாம் கால் பகுதியில் கோல் அடிக்க முடியாமல், தோல்வியை தழுவியது. இது வீராங்கனைகளிடையே சோகத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், அடுத்து வரும் போட்டிகளில் திறமையை வெளிக்காட்ட காத்திருக்கின்றனர்.

- நமது நிருபர் -

Advertisement