ஹால் டிக்கெட்டை பறித்துச் சென்ற கழுகு; கேரளாவில் அரசு பணித் தேர்வு எழுதச் சென்ற பெண் 'ஷாக்'!

12


காசர்கோடு: கேரளாவில் அரசுத் தேர்வு எழுத சென்ற பெண்ணின் ஹால் டிக்கெட்டை, கழுகு ஒன்று பறித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

காசர்கோட்டில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் அரசு பணிக்கான தேர்வு நேற்று நடைபெற்றது. பதவி உயர்வுக்காக காத்திருக்கும் கிளர்க் உள்ளிட்ட அரசு பணியாளர்கள் இந்தத் தேர்வில் பங்கேற்றனர்.

சரியாக காலை 7.30 மணிக்கு தேர்வு தொடங்க இருந்தது. இதற்காக, தேர்வர்கள் முன்கூட்டியே தேர்வறையின் முன்பு திரண்டிருந்தனர். அப்போது, தேர்வு தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, அங்கு வந்த செம்பருந்து வகையைச் சேர்ந்த கழுகு ஒன்று, வறண்டாவில் அமர்ந்திருந்த பெண் ஒருவரின் ஹால் டிக்கெட்டை பறித்துச் சென்று, அங்கிருந்த ஜன்னல் கதவு மீது அமர்ந்து கொண்டது. இதனால், அந்தப் பெண் அதிர்ச்சி அடைந்தார். மேலும், என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப் போனார்.

ஹால் டிக்கெட் இல்லாமல் போனால் அந்தப் பெண்ணால் தேர்வு எழுத முடியாமல் போய் விடும். இதனை கவனித்த பிற தேர்வர்கள், கழுகை பார்த்து கூச்சலிட்டனர்.

ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில், தேர்வு தொடங்க சில நிமிடங்களே இருந்த போது, அந்தக் கழுகு அங்கிருந்து பறந்து சென்றது. இதனால், ஹால் டிக்கெட் கீழே விழுந்தது. அந்தப் பெண் ஹால் டிக்கெட்டை எடுத்துக் கொண்டு தேர்வு எழுதச் சென்றார். இதனை பார்த்த பிற தேர்வர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

Advertisement