சீனா மீது அமெரிக்கா கூடுதல் வரி; மொத்த வரி 145 சதவீதமாக அதிகரிப்பு

13


வாஷிங்டன்: சீனா மீது 20 சதவீதம் டிரம்ப் கூடுதல் வரிகளை விதித்து உள்ளார். இதனால், மொத்த வரி இப்போது 145% ஆக உயர்ந்துள்ளது.


டிரம்ப் பதவி ஏற்ற போதே தங்களுக்கு வரி விதிக்கும் நாடுகளுக்கு அதே அளவு வரி விதிக்கப்படும் என்று எச்சரித்தார். அடுத்தடுத்து சீனாவுக்கு வரி மேல் வரி போட்டார். சீனாவும் பதிலுக்கு வரி போட துவங்கியது. சீனாவுக்கான அமெரிக்காவின் மொத்த வரி 104 சதவீதமாக உயர்ந்தது.

இதனால் சீனா, ஏற்கனவே அறிவித்த 34 சதவீதம் வரியுடன் 50 சதவீதத்தை சேர்த்து ஒரே நேரத்தில் 84 சதவீத வரியை அறிவித்தது. இதையடுத்து கடும் கோபம் அடைந்த, அதிபர் டிரம்ப் சீன பொருட்களுக்கான இறக்குமதி வரி 125 சதவீதமாக உயர்த்தப்படுவதாக அறிவித்தார்.



தற்போது, சீனா மீது 20 சதவீதம் டிரம்ப் கூடுதல் வரிகளை விதித்து உள்ளார். இதனால், மொத்த வரி இப்போது 145% ஆக உயர்ந்துள்ளது. சீனப் பொருட்களுக்கான வரிகளை 145 சதவீதமாக கடுமையாக உயர்த்துவதன் மூலம், சீனாவுடனான தற்போதைய வர்த்தகப் போரை அதிபர் டிரம்ப் தீவிரப்படுத்தியதாக வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியது.


அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய டிரம்ப், ''நாடு இயங்கும் விதத்தில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். உலகம் எங்களை நியாயமாக நடத்த வேண்டும் என்று நாங்கள் முயற்சிக்கிறோம்," என்று டிரம்ப் கூறினார்.


மேலும் தங்களது வரி விதிப்பு நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்காத நாடுகளுக்கு, 90 நாட்கள் வரை வரி விதிப்பு நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement