மருதமலை முருகன் கோவிலுக்கு வாகனங்களில் செல்ல புதிய கட்டுப்பாடு: கோவில் நிர்வாகம் அறிவிப்பு

கோவை: கோவை மருதமலை முருகன் கோவிலுக்கு விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில் நான்கு சக்கர வாகனங்களில் மலைக்குச் செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.



கோவை மாவட்டம் மருதமலை முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந் நிலையில் கோவிலில் நான்கு சக்கர வாகனங்களில் செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து கோவில் நிர்வாகம் வெனியிட்டுள்ள அறிவிப்பின் விவரம் வருமாறு;


மருதமலை சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் சட்டமன்ற அறிவிப்புகளின்படி பல்வேறு திருப்பணிகள் நடைபெற்று வருவதாலும், இத்திருக்கோவிலில் போதிய வாகன நிறுத்துமிடம் வசதி இல்லாத காரணத்தினாலும் இனி வரும் காலங்களில் செவ்வாய்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, கிருத்திகை, சஷ்டி, அரசு விடுமுறை நாட்கள் மற்றும் விசேஷ தினங்களில் மலைக்கோவிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை.


இதுபோன்ற நாட்களில் பக்தர்கள் மலைப்படிகள் வழியாகவும், கோவிலின் பஸ் மற்றும் திருக்கோவில் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ள பஸ்களில் சென்று சுவாமி தரிசனம் செய்யலாம்.


இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement