இந்திய ஜோடி வெண்கலம்: உலக துப்பாக்கி சுடுதலில்

பியுனஸ் ஏர்ஸ்: உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் ஷ்ருச்சி, சவுரப் சவுத்ரி ஜோடி வெண்கலம் வென்றது.
அர்ஜென்டினாவில், உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் தொடர் நடந்தது. இதன் கலப்பு அணிகளுக்கான 10 மீ., 'ஏர் பிஸ்டல்' தகுதிச் சுற்றில் இந்தியாவின் ஷ்ருச்சி இந்தர் சிங், சவுரப் சவுத்ரி (581.26 புள்ளி), மனு பாகர், ரவிந்திர் சிங் (579.19) ஜோடிகள் முறையே 3, 4வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்துக்கான போட்டிக்கு தகுதி பெற்றன.
மூன்றாவது இடத்துக்கான போட்டியில் ஷ்ருச்சி, சவுரப் சவுத்ரி ஜோடி 16-8 என, மனு பாகர், ரவிந்தர் சிங் ஜோடியை வீழ்த்தி வெண்கலம் கைப்பற்றியது. தங்கப்பதக்கத்தை சீன ஜோடி தட்டிச் சென்றது.
இத்தொடரில் 4 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் என 8 பதக்கம் வென்ற இந்தியா, பதக்கப்பட்டியலில் 2வது இடம் பிடித்தது. முதலிடத்தை சீனா (5 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம்) கைப்பற்றியது.