கணவர் கொலையில் மனைவி உட்பட 4 பேர் கைது

பாலக்காடு,தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுகா, கொரவன் திண்ணை கிராமத்தை சேர்ந்த குமார், 41, பாலக்கோடு அருகே, எர்ரனஹள்ளியில் வசித்து வந்தார். இவர் பாலக்கோட்டில், கோழி இறைச்சி கடை நடத்தி வந்தார். முதல் மனைவியை பிரிந்த நிலையில், கோவிந்தம்மாள், 36, என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு, 8 வயதில் மகள் உள்ளார்.
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக கோவிந்தம்மாள் மற்றும் புது பட்டாணியர் தெருவை சேர்ந்த தனியார் நிதி நிறுவன ஊழியர் நாகராஜ், 27, என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையறிந்த குமார் கள்ளக்காதலை கைவிடுமாறு கூறியுள்ளார்
இதனால் கடந்த, 10 நாட்களுக்கு முன், கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் கோவிந்தம்மாள் வீட்டை விட்டு வெளியேறி, பாலக்கோடு அண்ணாநகரில் உள்ள அவரது அக்கா வீட்டில் தங்கியிருந்தார். கடந்த, 9ல், கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் குமார் கொலை செய்யப்பட்டிருந்தார். பாலக்கோடு டி.எஸ்.பி., மனோகரன் தலைமையில் தனிப்படை அமைத்து, குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இதில், குமார் மனைவி கோவிந்தம்மாளிடம் விசாரித்ததில், கள்ளக்காதலுக்கு குமார் இடையூறாக இருந்ததால், அவரை கொலை செய்ய கள்ளக்காதலன் நாகராஜ் மற்றும் அவரது கூட்டாளிகளான சென்னம்பட்டி ஆனந்தகுமார், 27, சாமியார் கொட்டாயை சேர்ந்த தமிழரசன், 25, ஆகியோர் சேர்ந்து, கடந்த, 8 இரவு,
11-:00 மணிக்கு கடையில் தனியாக துாங்கி கொண்டிருந்த குமாரை கை, கால்களை கயிற்றால் கட்டி விட்டு, தலையணையை முகத்தில் வைத்து அமுக்கியும் உயிர் பிரியாததால், கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து கோவிந்தம்மாள், நாகராஜ், ஆனந்தகுமார், தமிழரசன் என, நான்கு பேரை கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

Advertisement