தெருநாய்களுக்கு கருத்தடை செய்யாவிடில்?

ஒரு தெருநாயின் வாழ்வை என்றாவது நினைத்து பார்த்திருக்கிறீர்களா. அதிலும், கவனிப்பாரின்றி இருக்கும் ஒரு பெண் நாயின் பேறுகால வாழ்வு மிக மோசமானது. ஆண்டுக்கு இருமுறை கர்ப்பம் தரிக்கும் ஒரு பெண் நாயின் இனப்பெருக்க காலம், கிட்டத்தட்ட 60 நாட்கள்.
ஒரு கர்ப்பத்தில் அதிகபட்சம் 10 குட்டிகள் வரை ஈனும். இவற்றிற்கு, 30 நாட்கள் வரை பாலுாட்ட வேண்டும். அந்நாட்களில் தாய் , தன் பசிக்கான இரையை தானே தேடிக்கொள்ள வேண்டும். எந்த மோசமான சூழலிலும் தற்காத்து கொள்வதற்கான, பயிற்சி முறைகளை குட்டிகளுக்கு சொல்லித்தர வேண்டும்.
வெயிலில் காய்ந்து, மழையில் நனைத்து, குளிரில் நடுங்கி பெற்றெடுக்கும் தன் குட்டிகளை, முறையாக கவனிக்க முடியாத பட்சத்தில் அவை ஒவ்வொன்றாக இறப்பதை கண்கூடாக காண நேரிடலாம். இதையெல்லாம் தாண்டி உயிர்பிழைக்கும் குட்டிகளில், பெரும்பாலானவை பட்டினியோடு தான் ஒவ்வொரு நாளையும் கழிக்கின்றன.
இந்தசூழலை கடந்தால், அடுத்த 6 மாதத்தில், மீண்டும் தாய் நாய் இனப்பெருக்கத்திற்கு தயாராகி, மேலே கூறப்பட்ட அத்தனை பாடுகளையும் அனுபவிக்க வேண்டும். இதற்காக தான், கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய வேண்டியது அவசியமாகிறது.
யார் பொறுப்பு
பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம் என ஒவ்வொரு நிலையிலான அரசின் நிர்வாக அமைப்புகளும், தெருநாய்களுக்கு தடுப்பூசி போடுதல், கருத்தடை அறுவை சிகிச்சை செய்தல் போன்ற பணிகளில், முழுவீச்சில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். சில முன்னணி நகரங்களில், தன்னார்வ அமைப்புகளுடன் அரசு கைகோர்த்து, இத்திட்டங்களை அவ்வப்போது செய்து வருகிறது. ஆனால், இது மாநிலம் முழுக்க அனைத்து கிராமங்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டும். இலக்கு காலம் நிர்ணயித்து நிதி ஒதுக்கினால் தெருநாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்த முடியும்.
மனிதர்களுக்கான நலனுக்கும், வளர்ச்சிப்பணிகளுக்குமே திண்டாடும் நிலையில், தெருநாய்க்கு நிதி ஒதுக்க வேண்டுமா என ஒரு அரசு நினைக்க ஆரம்பித்தால், பின்னாளில் சுற்றுச்சூழலின் உயிர் தொடர் சங்கிலியில் மிகப்பெரிய மாற்றத்தை சந்திக்க நேரிடலாம்.
எந்தவொரு உயிரினமும் அளவுக்கு அதிகமாக பெருகினாலும் அழிந்தாலும், அப்பாதிப்பின் தாக்கத்தை, மனிதர்களும் அனுபவித்தே தீர வேண்டுமென்பதை மறந்துவிட வேண்டாம்.
- பபிதா ராஜ், வழக்கறிஞர் மற்றும் நிறுவனர், மாத்வராஜ் அனிமல் கேர் டிரஸ்ட், உடுப்பி.