தண்டவாளத்தில் மண் சரிவு பல ரயில்கள் தாமதம்

நாகர்கோவில் : நாகர்கோவில் அருகே, ரயில்வே தண்டவாள சீரமைப்பு பணியின் போது, மண் சரிவில் சிக்கி மூன்று பேர் காயமடைந்தனர். இதனால், இரண்டரை மணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நாகர்கோவில் ஜங்ஷன் பகுதியில் ரயில் நிலைய விரிவாக்க பணிகள் நடக்கின்றன. இங்கிருந்து திருநெல்வேலி செல்லும் பாதையில் பழையாறு குறுக்கே செல்கிறது. அதன் அருகே குளத்தின் மேல் பகுதியில் அமைந்துள்ள தண்டவாளத்தில், தண்ணீர் தேங்காமல் இருக்க கான்கிரீட் குழாய் அமைக்கும் பணி நடைபெறுகிறது.
இயந்திரம் மூலம் நேற்று மண் தோண்டிக் கொண்டிருந்த போது, திடீரென்று மண் சரிவு ஏற்பட்டது. பணியில் இருந்த ரமேஷ், 47, மகாராஜன், 39, பாலமுருகன், 32, ஆகியோர் மண்ணுக்குள் சிக்கினர். உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு, ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மண் சரிவால், நாகர்கோவில் ஜங்ஷன் ரயில் நிலையத்துக்கு ரயில்கள் வர முடியவில்லை. இதனால், திருநெல்வேலி செங்குளம் முதல் ஆரல்வாய்மொழி வரையிலான நிலையங்களில் ரயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டன.
இரண்டரை மணி நேரத்திற்கு பின், மண் சரிவு சரிசெய்யப்பட்டு ரயில் போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. இதனால், பல ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன.