அமைச்சர்களுக்கு ரூ.2.71 கோடியில் சொகுசு கார்கள்; கேரள அரசின் தாராளம்

திருவனந்தபுரம்: கேரள அமைச்சர்களுக்கு ரூ.2.71 கோடியில் புது கார்கள் வாங்கப்பட்டுள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இது தற்போது விமர்சனங்களை எழச் செய்துள்ளது.
கேரள சட்டசபை கூட்டத் தொடரின் போது, காங்., எம்.எல்.ஏ., எல்தோஸ் குன்னப்பிள்ளி, அமைச்சர்களுக்கான கார் வாங்குவதற்காக செலவிடப்பட்ட தொகை குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த கேரள முதல்வர் பினராயி விஜயன், இனோவா கிறிஸ்டா கார்களை வாங்குவதற்காக ரூ.2.71 கோடி செலவிடப்பட்டதாக தெரிவித்தார். தேய்மானம் மற்றும் பழுது காரணமாக 13 அமைச்சர்களின் கார்கள் மாற்றப்பட வேண்டி இருந்ததாக முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.
கடந்த 2022ம் ஆண்டு, அமைச்சர்கள் கே.ராஜன், ரோஷி அகஸ்டின், சஜி செரியன், பி பிரசாத், வி சிவன்குட்டி, முகமது ரியாஸ், வீனா ஜார்ஜ் மற்றும் அப்துல் ரஹ்மான் ஆகியோருக்கு புதிதாக 8 இனோவா கிறிஸ்டா கார்கள் வாங்கப்பட்டன. 2024ம் ஆண்டில் வி.என்.வாசவன், ஆர்.பிந்து மற்றும் ஆர்.அனில் ஆகிய 3 அமைச்சர்களுக்கு கொஞ்சம் கூடுதல் விலையில் 3 பார்கள் வாங்கப்பட்டன. அதாவது, ஒரு காரின் விலை ரூ.25.78 லட்சமாகும்.
கடந்த 2022ம் ஆண்டு, காதி வாரிய துணை தலைவர் பி ஜெயராஜனுக்கு ரூ.35 லட்சத்திற்கு கார் வாங்கிய அரசின் முடிவு கடும் விமர்சனங்களை சந்தித்தது. ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்கு இவ்வளவு விலை கொடுக்க வேண்டி இருந்ததாகக் கூறி, அரசின் முடிவை தொழில்துறை நியாயப்படுத்தியிருந்தது.
அதேபோல, கடந்த 2024ம் ஆண்டு மாநில காவல்துறை புகார்கள் ஆணையத்தின் தலைவர் நீதிபதி (ஓய்வு) வி.கே .மோகனனின் பயன்பாட்டிற்காக ரூ.30.37 லட்சம் செலவில் புது கார் வாங்க உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்தது. இதற்கு முன்பு அவரது பயன்படுத்திய 2017ம் ஆண்டு மாடல் இனோவா கிறிஸ்டா கார் ஒரு லட்சம் கிலோ மீட்டர் கூட ஓடி முடிக்கவில்லை. அப்படியிருக்கையில், நிதிநிலைமையை கருத்தில் கொண்டு புது கார் வாங்க நிதித்துறை ஒப்புதல் கொடுக்க மறுத்திருந்தது.
கார்களில் ஏற்படும் பழுதுகள், இயந்திரக் கோளாறுகளை சரி செய்து பயன்படுத்துமாறு நிதித்துறை அறிவுறுத்தி இருந்தது. ஆனால், இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு வந்த கோரிக்கையை ஏற்று, புதிய கார்கள் வாங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் கேரள அரசு, அமைச்சர்களுக்கு இதுபோன்ற ஆடம்பர கார்களை வாங்க இப்படி தாராளம் காட்டலாமா? என்ற கேள்வியும், விமர்சனங்களையும் எழச் செய்துள்ளது.




மேலும்
-
தெருநாய் கடித்த ஒரகடம் சிறுவன் பலி ரேபிஸ் பாதிப்பில்லை என அதிகாரி விளக்கம்
-
அய்யங்கார்குளம் கிராமத்தில் இன்று நடவாவி உத்சவம்
-
காஞ்சிபுரம் தாலுகாவில் புதிதாக 2 பிர்காக்கள்... உதயம்! : மாதம் 3,000 விண்ணப்பங்கள் குவிவதால் நடவடிக்கை
-
நாமக்கல் முட்டை விலை நிலவரம் (12.04.25)
-
காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் ஏப்.21ல் சஹஸ்ர தீப அலங்கார காட்சி
-
நெட்டேரில் 12,000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்