நெட்டேரில் 12,000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பொது விநியோகத் திட்ட அரிசி கடத்தப்படுவதாக வரக்கூடிய தகவல்களின் அடிப்படையில் அவ்வப்போது சோதனை நடத்தி, வெளி மாநிலங்களுக்கு கடத்த பதுக்கியிருந்த அரிசி மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர்.

அந்த வகையில், குடிமை பொருள் வழங்கல் துறை அதிகாரிகளுக்கு வந்த தகவல் அடிப்படையில், நெட்டேரி கிராமத்தில், குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருடன், ஆய்வு நடத்தியுள்ளனர்.

அப்போது, அசோக் லேலன்ட் வேன் மற்றும் டாடா மினி லாரி ஆகிய வாகனங்களில், ஏராளமான மூட்டைகளில் ரேஷன் அரிசியை சிலர் ஏற்றிக் கொண்டிருந்தது தெரியவந்தது.

அதிகாரிகள் சோதனை நடத்தியதை அறிந்த மர்ம நபர்கள், அங்கிருந்து தப்பியோடினர். இதையடுத்து, அரிசி மூட்டைகளை ஆய்வு செய்ததில், 239 மூட்டைகளில், 12,000 கிலோ ரேஷன் அரிசி ஆவணங்கள் இன்றி இருந்தது தெரியவந்தது.

அரிசி மற்றும் வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தப்பியோடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement