காஞ்சிபுரம் தாலுகாவில் புதிதாக 2 பிர்காக்கள்... உதயம்! : மாதம் 3,000 விண்ணப்பங்கள் குவிவதால் நடவடிக்கை

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பிர்காவை பிரித்து, விஷ்ணு காஞ்சி மற்றும் செவிலிமேடு என, கூடுதலாக இரண்டு பிர்காவை உருவாக்க, வருவாய் துறையினர் அரசுக்கு கருத்துரு அனுப்பி உள்ளனர். மாதந்தோறும் 3,-000க்கும் அதிகமான விண்ணப்பங்கள் வருவதாலும், வருவாய் துறையினருக்கு பணிச்சுமை ஏற்படுவதாலும் பிர்காவை பிரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இரண்டு புதிய பிர்காக்கள் உருவாவதால், பணிகள் குறைந்து, சான்றிதழ்கள் வேகமாக கொடுக்க முடியும் என, வருவாய் துறையினர் தெரிவித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், வாலாஜாபாத், காஞ்சிபுரம், உத்திரமேரூர் என, ஐந்து தாலுகாக்கள் உள்ளன. இதில், வருவாய் துறை சம்பந்தமாக, பொதுமக்களிடம் அதிகளவில் கோரிக்கை மனுக்கள் பெறும் தாலுகாவாக காஞ்சிபுரம் உள்ளது.
இங்கு, பரந்துார், சிட்டியம்பாக்கம், காஞ்சிபுரம், திருப்புட்குழி, கோவிந்தவாடி, சிறுகாவேரிப்பாக்கம் என, 6 பிர்காக்கள் உள்ளன.
இதில், அதிகபடியான வருவாய் துறை பணிகள் மேற்கொள்ளும் பிர்காவாக காஞ்சிபுரம் உள்ளது. காஞ்சிபுரம் பிர்காவில் வருமானம், இருப்பிடம், ஜாதி, வாரிசு, விதவை சான்று, கணவனால் கைவிடப்பட்ட பெண் சான்று, முதல் பட்டதாரி சான்று என, அனைத்து வகையான சான்றுகள் கோரி, மாதந்தோறும் ஆயிரக்கணக்கில் விண்ணப்பங்கள் வருவதால், விண்ணப்பதாரர்களுக்கு சரியான நேரத்தில் சான்றிதழ் வழங்குவதில் சிக்கல் ஏற்படுகிறது.
அதுமட்டுமல்லாமல், வருவாய் ஆய்வாளருக்கு பணிச்சுமையும் ஏற்படுவதாக துறை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
காஞ்சிபுரம் பிர்காவின் கீழ், செவிலிமேடு, காஞ்சிபுரம், சின்ன காஞ்சிபுரம், தேனம்பாக்கம், ஓரிக்கை, அரப்பணஞ்சேரி என, 22 வருவாய் கிராமங்கள் உள்ளன. இந்த, 22 வருவாய் கிராமங்களில் உள்ள கிராம நிர்வாக அலுவலருக்கு வரக்கூடிய வருவாய் துறை சான்றிதழ்களை, ஒரே ஒரு வருவாய் ஆய்வாளர், தாசில்தாருக்கு பரிந்துரை செய்ய போதிய அவகாசம் கிடைப்பதில்லை என்கின்றனர்.
மாதந்தோறும், சராசரியாக 3,000 பேர், பல வகையான சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்கின்றனர். இவற்றை, 7 நாட்களுக்குள் தீர்க்க சிரமம் ஏற்படுவதால், பிர்காவை பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வருவாய் துறையினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், சட்டசபை மானிய கோரிக்கை அறிவிப்பில், வருவாய் துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதிதாக இரண்டு பிர்காக்கள் உருவாக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, காஞ்சிபுரம் பிர்காவை பிரித்து, செவிலிமேடு மற்றும் விஷ்ணுகாஞ்சி என, கூடுதலாக இரண்டு பிர்கா உருவாக்க, காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் துறையினர், அரசுக்கு கருத்துரு அனுப்பியுள்ளது.
காஞ்சிபுரம் பிர்காவில், ஏற்கனவே 22 வருவாய் கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களை பிரித்து, விஷ்ணுகாஞ்சி பிர்கா ஒன்றை புதிதாக உருவாக்கி அதில், 10 கிராமங்களை சேர்க்க உள்ளனர்.
அதேபோல, செவிலிமேடு பிர்கா ஒன்றை உருவாக்கி அதில், காஞ்சிபுரம் பிர்காவில் இருந்து 4 கிராமங்களும், சிறுகாவேரிப்பாக்கம் பிர்காவில் இருந்து 10 கிராமங்களும் என, 14 கிராமங்கள் கொண்ட பிர்காவைாக செவிலிமேட்டை உருவாக்க உள்ளனர்.
இதன் வாயிலாக, காஞ்சிபுரம் பிர்கா இனி வரும் காலங்களில் 8 கிராமங்களுடன் செயல்படும் என, வருவாய் துறையினர் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து வருவாய் துறையினர் கூறியதாவது:
சான்றிதழ் கேட்டு விண்ணப்பிப்போருக்கு, 7 நாட்களுக்குள் சான்றிதழை வழங்க வேண்டும். காஞ்சிபுரம் குறுவட்டத்தில் மட்டும், மாதந்தோறும் 3,000க்கும் மேற்பட்டோர் சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்கின்றனர்.
காஞ்சிபுரம் நகர்ப்புறம் இந்த குறுவட்டத்திற்குள் இருப்பதால், மக்கள் தொகை அதிகம் உள்ளது. இதனால், ஏராளமானோர் பல வகையான சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்கின்றனர்.
குறிப்பாக, வாரிசு சான்றிதழ் வழங்க நேரில் விசாரணை நடத்தக்கூட போதிய நேரம், வருவாய் ஆய்வாளருக்கு கிடைப்பதில்லை. இதுமட்டுமல்லாமல், சட்டம் - ஒழுங்கு விவகாரத்தையும், பட்டா விசாரணையும் பார்க்க வேண்டும்.
ஜமாபந்தி முகாமில், மாவட்டத்திலேயே அதிகபட்சமாக, காஞ்சிபுரம் பிர்காவுக்கு 600க்கும் மேற்பட்ட மனுக்கள் வருகின்றன. இவற்றை தீர்க்க போதிய அவகாசம் கிடைப்பதில்லை. புதிதாக செவிலிமேடு, விஷ்ணுகாஞ்சி என, இதற்கான அறிவிப்பு வெளியான நிலையில், அரசாணை வெளியிடப்பட்டு, அதன்பிறகு பணியிடங்கள் நிரப்பினால், புதிய பிர்காக்கள் செயல்பட துவங்கும். மேலும், காஞ்சிபுரம் பிர்கா என்ற பெயர் மாற்றப்பட்டு, சிவகாஞ்சி பிர்கா எனவும் பெயர் மாற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
மேலும்
-
ராஜஸ்தானில் சோகம்; கார்- லாரி மோதியதில் ஒரே குடும்பத்தில் 5 பேர் பலி
-
அ.தி.மு.க., கூட்டணியின் வெளியே தெரியாத ரகசியம் ! ராஜ்யசபாவில் பெரும் பலம் பெற பா.ஜ., வியூகம்
-
கோவையில் ஐ.பி.எல்., சூதாட்டம்' ஏழு பேர் கைது; ரூ. 1.09 கோடி, கார் பறிமுதல்
-
திருமூர்த்திமலையில் சுற்றுலா பயணியர் குஷி
-
தி.மலையில் பங்குனி மாத பவுர்ணமி லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்
-
மாணவியை தனிமைப்படுத்திய விவகாரம்; உண்மைக்கு மாறான தகவல் பரப்பி ஆதாயம்