மாறுகிறது கிரிக்கெட் விதிகள் * பவுலர்களுக்கு சாதகமாக...

புதுடில்லி: ஒருநாள் போட்டிகளில் பேட்டர்களுக்கு சாதகமான இரண்டு பந்து விதியில் மாற்றம் வரவுள்ளது. ஒருநாள் போட்டிகளின் விதிகள் பல, பேட்டர்களுக்கு சாதகமாக உள்ளன.
* இரண்டு பக்கமும் புதிய பந்து பயன்படுத்தப்படுவதால், தொடர்ந்து கடினத்தன்மையுடன் உள்ளது. இதனால் பேட்டர்கள் எளிதாக ரன் சேர்க்கின்றனர்.
ஒரு பந்து மட்டும் பயன்படுத்திய போது, 35 ஓவருக்குப் பின் தேய்மானம் ஏற்படும். இதில், வேகப்பந்து வீச்சாளர்கள் 'ரிவர்ஸ் ஸ்விங்' செய்து மிரட்டுவர்.
தற்போது ஒவ்வொரு பந்திலும் 25 ஓவர்கள் மட்டும் வீசப்படுவதால், இதற்கு வழியில்லாமல் போனது. தவிர, சுழற்பந்து வீச்சாளர்கள் பந்தில் திருப்பம் ஏற்படுத்த முடியாமல் திணறுகின்றனர்.
* உள்வட்டத்திற்கு வெளியே (27.43 மீ., துாரம்) நான்கு பீல்டர்கள் மட்டும் நிற்கின்றனர். இதனால் பவுலர்கள் பாடு திண்டாட்டமாக உள்ளது.
இதனால் 25 ஓவர்கள் வரை இருபக்கமும் புதிய பந்து பயன்படுத்தி விட்டு, இதன் பின் ஏதாவது ஒரு பந்தை மீதமுள்ள 25 ஓவர்கள் பயன்படுத்த உள்ளனர்.
டெஸ்டில் '90'
டெஸ்டில் இரண்டு ஒவர்களுக்கு இடையே 60 வினாடி கால அவகாசம் தருவது, ஒவ்வொரு நாளும் 90 ஓவர்கள் முழுவதுமாக வீசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
* சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) தொடர் தவிர, இரு தரப்பு ஒருநாள் தொடர்கள் குறைந்து விட்டன. ஒருநாள் போட்டிகளில் விளையாடும் 19 வயதுக்குட்பட்ட வீரர்கள், 'டி-20' வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால், 19 வயதுக்குட்பட்ட ஒருநாள் உலக கோப்பை தொடரை, 50 ஓவருக்குப் பதில், 'டி-20' வடிவில் நடத்துவது என, இந்திய அணி முன்னாள் கேப்டன் கங்குலி தலைமையிலான ஐ.சி.சி., கிரிக்கெட் கமிட்டி பரிந்துரை செய்துள்ளது.