ரூ.65 லட்சம் நில மோசடி அ.தி.மு.க., பிரமுகர் சிக்கினார்

ஆவடி:கே.கே.நகரைச் சேர்ந்தவர் மணி, 65. இவர், பொன்னேரி அடுத்த விஷ்ணு நகரில், குடிசையுடன் கூடிய 1,780 சதுர அடி இடத்தை, கடந்த 1987ம் ஆண்டு வாங்கினார். அந்த இடத்தின் மதிப்பு, 65 லட்சம் ரூபாய்.

இந்த நிலையில், தன் மகளின் திருமணத்திற்காக அந்த இடத்தை விற்க முடிவெடுத்து, கடந்தாண்டு, மே மாதம் வில்லங்கம் போட்டு பார்த்துள்ளார்.

தில்பேன் பெரால் கோமாஸ் என்பவரிடம் மணியின் பெயரில் ஆள்மாறாட்டம் செய்து, கடந்த 2014ம் ஆண்டு, போலியாக பத்திரப்பதிவு செய்திருப்பது தெரிந்தது.

இது குறித்து மணி கொடுத்த மனுவின்படி, அந்த இடத்திற்கான பட்டா ரத்து செய்யப்பட்டது. பின், ஆள்மாறாட்டம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, ஆவடி மத்திய குற்றப்பிரிவில், மணி புகார் அளித்தார்.

இது குறித்து போலீசார் விசாரித்து, மோசடிக்கு உடந்தையாக இருந்த வடகரை கிராண்ட்லைன் பகுதியைச் சேர்ந்த அரசு, 52, என்பவரை கைது செய்து, நேற்று முன்தினம் இரவு சிறையில் அடைத்தனர்.

இவர் புழல் ஊராட்சி ஒன்றிய அ.தி.மு.க., செயலராக உள்ளார்.

Advertisement