காற்றில் பறந்த ராகுலின் தேர்தல் வாக்குறுதி; பல்லாரியில் 40 ஜீன்ஸ் தொழிற்சாலைகள் மூடல்

பல்லாரி : மின்கட்டண உயர்வு உட்பட பல காரணங்களால், பல்லாரியில் இயங்கி வந்த 40 ஜீன்ஸ் பேண்ட் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பல்லாரியில் ஜீன்ஸ் பூங்கா அமைக்கப்படும் என்ற, ராகுலின் தேர்தல் வாக்குறுதி காற்றில் பறந்துள்ளது.

கர்நாடகாவின் பல்லாரியில் தயாரிக்கப்படும் ஜீன்ஸ் பேண்டுகளுக்கு உலக சந்தையில் நல்ல மவுசு உள்ளது. இதனால் பல்லாரியில், 100க்கும் மேற்பட்ட ஜீன்ஸ் உற்பத்தி தொழிற்சாலைகள் இயங்கி வந்தன.

கொரோனா நேரத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் உற்பத்தி முடங்கியதால் 30 தொழிற்சாலைகள் மூடப்பட்டன. அதில் சில தொழிற்சாலைகள் மீண்டும் திறக்கப்பட்டாலும் நஷ்டத்தில் இருந்து, அவர்களால் தற்போது வர மீண்டு வர முடியவில்லை.

இந்நிலையில் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் 2022ல் 'பாரத் ஜோடோ' யாத்திரை நடத்தியபோது, பல்லாரியில் ஜீன்ஸ் உற்பத்தி தொழிற்சாலையில் பணி செய்யும் தொழிலாளர்களை சந்தித்தார். இங்கு ஜீன்ஸ் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

கடந்த 2023 சட்டசபை தேர்தலில் பல்லாரியில் பிரசாரம் செய்த போதும், 'காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் முதல் அமைச்சரவை கூட்டத்தில் ஜீன்ஸ் பூங்கா அமைப்பது பற்றி அறிவிப்பு வெளியிடப்படும்' என்றார் ராகுல்.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து அடுத்த மாதத்துடன் 2 ஆண்டுகள் நிறைவடைய போகிறது. ஆனால் இதுவரை ஜீன்ஸ் பூங்கா அமைப்பது பற்றி அறிவிப்பும் வெளியாகவில்லை.

இதற்கிடையில் மின்கட்டண உயர்வு, தண்ணீர் பிரச்னை, உற்பத்தி செலவு அதிகரிப்பு, மூலப்பொருள் விலை உயர்வு உட்பட பல்வேறு காரணங்களால், கடந்த 2 மாதங்களில் மட்டும் பல்லாரியில் 40 ஜீன்ஸ் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.

இதனால் அங்கு வேலை செய்த தொழிலாளர்கள், தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

பல்லாரி மாவட்டத்தில் உள்ள 5 தொகுதியிலும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் தான் உள்ளனர். எம்.பி.,யும் காங்கிரஸ்காரர் தான். இவர்கள் 6 பேரும், ஜீன்ஸ் பூங்கா அமைப்பது பற்றியோ, மூடப்பட்டு வரும் தொழிற்சாலைகள் பற்றியோ அரசு கவனத்திற்கு கொண்டு செல்லாமல் அலட்சியமாக உள்ளனர்.

ஜீன்ஸ் பூங்கா கூட அமைக்க வேண்டாம். மின்கட்டணம், மூல பொருட்கள் விலையை உயர்த்தாமல் இருந்தாலே சரி தான் என்று அரசுக்கு, தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisement