கல்லுாரி விரிவுரையாளர்கள் முகமூடி அணிந்து போராட்டம்

வால்பாறை : வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள், முகமூடி அணிந்து, நுாதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வால்பாறையில் உள்ள, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 18 ஆண்டுகளாக, 35 பேர் கவுரவ விரிவுரையாளர்களாக பணியாற்றுகின்றனர்.

இந்நிலையில், நீதிமன்ற தீர்ப்பின் படி கவுரவ விரிவுரையாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பணி நிரந்தரம் செய்யும் வரை காலமுறை ஊதியம், 12 மாதமும் வழங்க வேண்டும். பணி பாதுகாப்புடன் கூடிய பணியிட மாறுதல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட, 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கல்லுாரி நுழைவுவாயிலின் முன், முகமூடி அணிந்து கோரிக்கைகளை வலியுறுத்தி நுாதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து, தமிழ்நாடு அரசு கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்கள் ஆட்சி மன்றக்குழு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்திலுள்ள, அரசு கல்லுாரிகளில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக, கவுரவ விரிவுரையாளர்கள் பணிபுரிகின்றனர். கடந்த 20 ஆண்டுகளாக பணி நிரந்தரம் செய்யக்கோரி அரசிடம் கோரிக்கை வைத்து வருகிறோம். ஆனால், இது வரை ஒரு கோரிக்கை கூட நிறைவேற்றவில்லை. தமிழக அரசும், உயர்கல்வித்துறை அதிகாரிகளும் தொடர்ந்து வஞ்சித்து வருகின்றனர். ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் தொடர்பான நீதிமன்ற தீர்ப்புக்களை தமிழக அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. நீதிமன்ற தீர்ப்பையாவது, சட்டசபை கூட்டத்தொடரில் நிறைவேற்றுங்கள்.

இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement