பெங்களூரு மாநகராட்சி முதன் முறையாக ரூ.4,927 கோடி சொத்து வரி வசூல்

பெங்களூரு : பெங்களூரு மாநகராட்சி, முதன் முறையாக சொத்து வரி வசூலில் 4,900 கோடி ரூபாயை தாண்டியுள்ளது.

பெங்களூரு மாநகராட்சிக்கு, அதிக வருவாய் கொண்டு வருவதில் சொத்து வரிக்கு முக்கிய பங்கு உள்ளது. ஆனால் இதுவரை சொத்து வரி வசூலில் மாநகராட்சி பின் தங்கி இருந்தது. மாநில அரசின் உதவியை மட்டுமே நம்பி, ஆண்டுதோறும் பட்ஜெட் தாக்கல் செய்து வந்தது. ஆனால் முந்தைய ஆண்டு வரி வசூலில் சாதனை செய்துள்ளது.

கடந்த 2024 - 25ம் ஆண்டு பட்ஜெட்டில், 5,210 கோடி ரூபாய் சொத்து வரி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 4,927 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இப்போதே முதன் முறையாக சொத்து வரி வசூலில் 4,000 கோடி ரூபாயை தாண்டியது.

முந்தைய 2023 - 24ம் ஆண்டை விட, 1,027 கோடி ரூபாய் கூடுதலாக வசூலித்துள்ளது. 'ஒன் டைம் செட்டில்மென்ட்' திட்டத்தை செயல்படுத்தியது.

இதன்படி ஒரே முறையில் வரி பாக்கியை செலுத்தியவர்களுக்கு, அபராதம், வட்டி தள்ளுபடி செய்யப்பட்டது.

பெருமளவில் வரி பாக்கி வைத்திருந்த, வர்த்தக நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, பூட்டு போட்டும் வரி வசூலித்தது.

வரி பாக்கி வைத்திருந்த நிறுவனங்கள், வீடுகள் முன்பாக தம்பட்டம் அடித்து, நோட்டீஸ் ஒட்டியது. இத்தகைய நடவடிக்கைக்கு பயந்து, சொத்துதாரர்கள் வரி செலுத்தினர்.

வரி வசூலில் சாதனை செய்த அதிகாரிகளை ஊக்குவிக்கும் நோக்கில், வரி வசூல் அடிப்படையில் எட்டு மண்டலங்களுக்கும் 'ரேங்கிங்' அளிக்கப்பட்டுள்ளது.

எலஹங்கா முதல் இடத்தைப் பிடித்தது. மஹாதேவபுரா இரண்டாவது, தெற்கு மண்டலம் மூன்றாவது, கிழக்கு நான்காவது, தாசரஹள்ளி ஐந்தாவது, மேற்கு மண்டலம் ஆறாவது, ஆர்.ஆர்.நகர் ஏழாவது, பொம்மனஹ்ஹள்ளி எட்டாவது இடத்தைப் பிடித்தன.

Advertisement