தி.மலையில் பங்குனி மாத பவுர்ணமி லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் பங்குனி மாத பவுர்ணமியான நேற்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

பங்குனி மாத பவுர்ணமி திதி நேற்று அதிகாலை, 4:15 மணிக்கு தொடங்கி, இன்று காலை, 6:08 மணிக்கு முடிகிறது. இதையொட்டி திருவண்ணாமலையில் நேற்று அதிகாலை முதலே, லட்சக்கணக்கான பக்தர்கள், அண்ணாமலையார் மலையை சுற்றி கிரிவலம் சென்றனர்.

கோடை வெயிலின் தாக்கத்தால், அருணாசலேஸ்வரர் கோவிலிற்கு சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் வசதிக்காக கோவிலின் வெளிப்புறத்தில் நீண்ட துாரத்திற்கு நிழல் பந்தல்கள் அமைக்கப்பட்டன. அருணாசலேஸ்வரர் கோவில் உட்பிரகாரத்தில் தரிசன வரிசையில் வரும் பக்தர்களுக்கு, கோவில் நிர்வாகம் சார்பில் நீர் மோர், சுத்திகரித்த குடிநீர் வழங்கப்பட்டது. பக்தர்கள் எண்ணிக்கை அதிகளவில் இருந்ததால், அருணாசலேஸ்வரர் கோவிலில், 4 முதல், 5 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நேற்று அதிகாலை முதலே பல மாவட்டங்கள், பல மாநிலங்களில் இருந்து வந்த பக்தர்கள் கிரிவலம் சென்ற வண்ணம் இருந்தனர்.

கிரிவல பக்தர்களின் பாதுகாப்பிற்காக கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மாவட்ட நிர்வாகம் சார்பில், அருணாசலேஸ்வரர் கோவில் உட்புறம் மற்றும் கிரிவலப்பாதையில் சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டன.

Advertisement