அ.தி.மு.க., கூட்டணியின் வெளியே தெரியாத ரகசியம் ! ராஜ்யசபாவில் பெரும் பலம் பெற பா.ஜ., வியூகம்

16


புதுடில்லி : அதிமுகவுடன் பா.ஜ., கூட்டணி அமைத்திருப்பது பல விமர்சனங்களை தந்தாலும் பார்லி.,யில் ராஜ்யசபா (மாநிலங்களவை ) எம்.பி.,க்கள் பலம் பெற்று 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பா.ஜ., தலைமையிலான தேசியஜனநாயக கூட்டணி பலம் பெறும் உகந்த சூழல் உருவாகி உள்ளது.

பெரும்பான்மை எவ்வளவு ?



மத்தியில் ஆளும் தே.ஜ., கூட்டணி பல்வேறு மாநிலங்களில் அரசியல் ஸ்திர நிலையை பலப்படுத்தி வருகிறது. லோக்சபாவில் நிறைவேற்றப்பட்ட எந்தவொரு மசோதாவும் ராஜ்யசபாவில் வந்து தான் சட்டமாக உருமாற முடியும். இதற்கு இந்த சபையில் பெரும்பான்மை எம்பி.,க்கள் அவசியமாகிறது. தற்போது உள்ள ராஜ்யசபாவில் 245 எண்ணிக்கையில் 9 இடங்கள் காலியாக உள்ளன. இதன்படி தற்போது உள்ள 236 ல் பெரும்பான்மைக்கு 119 தேவை. இதில் பாஜ., கட்சி எம்பி.,க்கள் மட்டும் 98 பேர். இதன் பலத்தை இன்னும் அதிகரிக்க பா.ஜ., மேலிடம் முயற்சிக்கிறது.

இதன் ஒரு முயற்சியாக அதிமுக கூட்டணியின் விளைவு, அதாவது மாநிலத்தில் சட்டசபையில் இடம் பெறுவதுடன், ராஜ்யசபா உறுப்பினர் பதவியையும் பெருக்கி கொள்ள முடியும் என பா.ஜ., திட்டமிட்டு காய் நகர்த்துகிறது.

அதிமுக இணைவதால்



இப்போது அதிமுக பா.ஜ.,வில் இணைந்த பிறகு, ராஜ்யசபாவின் எண்ணிக்கையும் மாறும். அதிமுக வருகையால் 119 என்ற தே.ஜ., கூட்டணி எம்.பி.,க்கள் 123 ஆகிறது. ராஜ்யசபாவில் அதிமுகவுக்கு தம்பிதுரை, சிவி சண்முகம், தர்மர், சந்திரசேகர் என நான்கு உறுப்பினர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

பா.ம.க.வை சேர்ந்த அன்புமணி ராமதாஸின் பதவிக்காலம் ஜூலை மாதம் முடிவடைகிறது. இந்த உறுப்பினர் பதவி தமிழக சட்டசபையின் தற்போதைய சூழ்நிலையின் அடிப்படையில், அதிமுக இந்த இடத்தையும் பெறும். இது ராஜ்யசபாவில் அதன் உறுப்பினர்களின் எண்ணிக்கையை ஐந்தாக அதிகரிக்கும். தே.ஜ., கூட்டணி எண்ணிக்கை 124 ஆக உயரக்கூடும்.

ஆந்திரா- காஷ்மீர் நிலை



ஆந்திராவில் ஒரு ராஜ்யசபா இடம் காலியாக உள்ளது, இது முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியிடம் இருந்தது. இதேபோல், நியமன எம்.பி.க்களுக்கான நான்கு இடங்கள் காலியாக உள்ளன, இதுவும் பாஜ.,வுக்கு சாதகமாகவே இருப்பதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளன.
ஜம்மு காஷ்மீரில் நான்கு உறுப்பினர்கள் இடம் காலியாக உள்ளன. தேர்தல் நடைபெறும் போது, ​​90 எம்எல்ஏ.,க்களைக் கொண்ட சபையில் 29 எம்எல்ஏக்களைக் கொண்ட பாஜ குறைந்தது ஒரு இடத்தையாவது வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2 இடம் பெறுவதற்கான வாய்ப்புகளும் உள்ளது.

இலக்கு 140



ஆக மொத்தம் 245 உறுப்பினர்களைக் கொண்ட ராஜ்யசபாவில் பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி 140 உறுப்பினர்கள் கொண்ட பெரும்பான்மை கட்சியாக திகழும் வாய்ப்பு உருவாகி உள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு 2014க்குப்பிறகு அதிக பெரும்பான்மை கொண்ட கட்சியாக ராஜ்யசபாவில் திகழும். தற்போது காங்., தலைமையிலான இண்டி கூட்டணியில் 88 ராஜ்யசபா உறுப்பினர்கள் உள்ளனர். இதில் காங்கிரஸ் 27, திரிணாமுல் காங்கிரஸ் 13, ஆம்ஆத்மி, திமுக தலா 10.



வக்பு மசோதா- ஒரேநாடு ஒரே தேர்தல்

ஏற்கனவே வக்பு சட்ட மசோதா நிறைவேற்ற பெரும்பாடு பட வேண்டியிருந்தது. நள்ளிரவு முதல் விடிய, விடிய விவாதம் நடந்தது. இதில் தி.மு.க., கூட்டணி கட்சிகள் மற்றும் அ.தி.மு.க., எதிராக ஓட்டளித்துள்ளன. பா.ம.க, வெளிநடப்பு செய்தது. 128 பேர் ஆதரவுடன் வக்ப் மசோதா நிறைவேறியது. இது போல் ஒரே நாடு , ஒரே தேர்தல் விரைவில் சட்டம் வரவுள்ளது. இதற்குள் தே.ஜ., கூட்டணி ராஜ்யசபாவில் பெரும் பலம் பெறும் என்று பா.ஜ., மூத்த தலைவர்கள் நம்புகின்றனர்.

Advertisement