ரீல்ஸ், ஷார்ட்ஸ், ஸ்டேட்டஸ் போட ஆளெடுப்பு; அ.தி.மு.க., ஐ.டி., பிரிவுக்கு புத்துயிர் அளிக்க முயற்சி

2

சென்னை: சட்டசபை தேர்தலுக்கு தகவல் தொழில்நுட்ப பிரிவை (ஐ.டி.,விங்) தயார் செய்வதற்காக, ஆள் தேர்வு செய்யும் அறிவிப்பை அ.தி.மு.க., வெளியிட்டுள்ளது. ரீல்ஸ், ஷார்ட்ஸ், ஸ்டேட்டஸ் போட தகுதியான நபர்களை நியமிக்க உள்ளனர்.


அரசியல் களத்தில் தகவல் தொழில்நுட்ப பிரிவு (ஐ.டி., விங்) பங்கு முக்கிய ஒன்றாக மாறிவிட்டது. கட்சி தலைவர்கள் பேசுவது, அறிவிப்பு, எதிர்க்கட்சி தலைவர்களை வாரி விடுவது போன்ற வேலைகளில் ஐ.டி., பிரிவினரின் வேலை முக்கியமானது. தற்போது சமூகவலைதளத்தில் தி.மு.க., மற்றும் பா.ஜ., ஐ.டி.,விங் தான் 'பவர்புல்'லாக இருக்கிறது. அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப பிரிவு பெயரளவுக்கு இருந்தாலும், தி.மு.க., - பா.ஜ., கட்சிகளுடன் போட்டியிடும் வகையில் இல்லை.

இது பற்றிய புகார்கள் கட்சி தலைமைக்கு கொண்டு செல்லப்பட்டன. இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் தற்போது அ.தி.மு.க., தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இணையத்தில் இரட்டை இலையின் குரலை ஒலிக்கச் செய்யும் வகையில் ஒவ்வொரு மாவட்ட கழகத்துக்கும் இரண்டு பேர் வீதம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.



''எளிய மக்களுக்கான அரசியலை பேச கூடியவர், மாநில அரசியல் அதிர்வுகளை கவனிப்பவர், சோஷியல் மீடியாவை தன் அரசியல் பாதையாக ஆக்கி கொண்டவர், மாவட்ட அரசியல் அசைவுகளை அறிந்தவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்' என்று அந்த அறிவிப்பில் அ.தி.மு.க., தலைமை தெரிவித்துள்ளது.


ஷார்ட்ஸ், ரீல்ஸ், ஸ்டேட்டஸ், podcasts, spacesகளில் உங்கள் மாவட்டத்திற்கான இரட்டை இலையின் டிஜிட்டல் குரலாக ஒலிக்கச் செய்பவருக்கு வாய்ப்பு என்று அ.தி.மு.க., அறிவித்துள்ளது. இப்படி நியமனம் செய்யப்படுபவர் மூலம், ஐ.டி., விங் செயல்பாடுகளை மேம்படுத்த அ.தி.மு.க., தலைமை திட்டமிட்டுள்ளது.

Advertisement