மல்லை சத்யாவை நீக்க கோரி தீர்மானம் நிறைவேற்றாதீர் என வைகோ கண்டிப்பு

19

சென்னை : 'கட்சி கட்டுப்பாட்டிற்கு எதிராக, கூட்டங்கள் நடத்துவது, தீர்மானங்கள் நிறைவேற்றுவது கூடாது' என, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

ம.தி.மு.க.,வில், அக்கட்சியின் முதன்மை செயலர் துரை வைகோவுக்கும், துணைப் பொதுச்செயலர் மல்லை சத்யாவுக்கும் இடையே, கோஷ்டி மோதல் தீவிரம் அடைந்துள்ளது.

மல்லை சத்யாவை கட்சியிலிருந்து நீக்க, திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் நடந்த ம.தி.மு.க., நிர்வாகிகள் கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதற்கு, தமிழகம் முழுதும் மாவட்ட வாரியாக உள்ள மல்லை சத்யாவின் ஆதரவாளர்கள், கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ம.தி.மு.க.,வில் வாரிசு அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதால், துரை வைகோ, மல்லை சத்யா என, இரண்டு அணிகள் உருவாகி உள்ளன. இருவரையும் சமாதானப்படுத்தும் பணியில், வைகோ ஈடுப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

ம.தி.மு.க., நிர்வாகக்குழு கூட்டம், வரும் 20ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சில மாவட்டங்களில் கூட்டத்தை கூட்டி, தீர்மானங்கள் நிறைவேற்றிய செய்திகள் வந்துள்ளன.

கட்சி கட்டுப்பாட்டிற்கு எதிராக, இத்தகைய கூட்டங்கள் நடத்துவது, தீர்மானங்கள் நிறைவேற்றுவது கூடாது என, அறிவுறுத்தப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement