காணாமல் போன மகன் எங்கே? தேடி அலையும் 75 வயது தாய்!

பெங்களூரு: கிராமத்தில் இருந்து பெங்களூரு வந்த மூதாட்டி, காணாமல் போன தன் மகனை தேடி அலைகிறார்.
பெங்களூரின் ஹெச்.எஸ்.ஆர்., லே - அவுட்டில் வசிப்பவர் சரோஜம்மா, 75. இவரது கணவர் அரசு பணியில் இருந்தவர். பணியில் இருக்கும் போதே அவர் இறந்ததால், கருணை அடிப்படையில் தன் மகன் சந்தீப்புக்கு அரசு பணி கிடைக்க, சரோஜம்மா உதவியாக இருந்தார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன், சந்தீப்புக்கும், ரேகா என்பவருக்கும் திருமணம் நடந்தது. ரேகாவுக்கு இது இரண்டாவது திருமணம். சந்தீப் அரசு பணியில் இருப்பதால், முதல் கணவரை விட்டு விலகிய ரேகா, சந்தீப் பின்னால் சுற்றி, அவரை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
அதன் பின்னரே அவரது நிஜ முகம் தெரிந்தது. ஒரு வாரம் கணவர் வீட்டில் இருந்தால், மாதக்கணக்கில் தாய் வீட்டில் இருப்பாராம்.
இது குறித்து, கணவர் தட்டி கேட்டு உள்ளார். தன்னை தாக்கியதாகவும், கொலை செய்ய முயற்சிப்பதாகவும் போலீசாரிடம் புகார் அளிப்பதாக ரேகா மிரட்டினார்.
இதற்கிடையே மாமியார் சரோஜம்மாவை, வீட்டை விட்டு வெளியேற்றும்படி கணவருக்கு ரேகா நெருக்கடி கொடுத்தார். இதற்கு சந்தீப் சம்மதிக்கவில்லை. 'தாய்க்கு என்னை விட்டால் யாரும் இல்லை. எனவே வெளியே அனுப்ப முடியாது' என, சந்தீப் மறுத்துள்ளார்.
இந்நிலையில் கர்ப்பமடைந்த ரேகா, பிரசவத்துக்காக தாய் வீட்டுக்கு சென்றார். குழந்தை பிறந்த பின்னரும், கணவர் வீட்டுக்கு வரவில்லை. சரோஜம்மாவை வீட்டில் இருந்து வெளியேற்றும்படி, கணவரை தொடர்ந்து இம்சித்தார்.
ரேகாவுடன் வாழ முடியாது என்பதை புரிந்து கொண்ட சந்தீப், விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடினார். மனம் வருந்திய சரோஜம்மா, மகன் நிம்மதியாக இருக்கட்டும் என, நினைத்து கிராமத்தில் உள்ள மகளின் வீட்டுக்கு சென்றார்.
அதன்பின் ரேகா, கணவர் வீட்டுக்கு வந்தார். அப்போதும் சந்தீப்பை நிம்மதியாக விடவில்லை.
பல விதங்களில் தொல்லை கொடுத்தார். சந்தீப் தன் தாயிடம் கூறி, வருந்தினார். நான் உயிருடன் இருக்கமாட்டேன் என, கூறியுள்ளார்.
இதனால் பயந்த சரோஜம்மா, மகனை பார்க்க வந்தார். ஆனால் அவரை ரேகா உள்ளேயே விடவில்லை.
கதவை பூட்டிக்கொண்டார். என் மகனை பார்க்க வேண்டும் என கேட்ட போது, சந்தீப்பை மறுவாழ்வு மையத்தில் சேர்த்துள்ளதாக ரேகா கூறினார்.
சரோஜம்மா அந்த மையத்துக்கு சென்ற போது, அங்குள்ள ஊழியர்கள் உள்ளே விடவில்லை. சந்தீப்பை காட்டவும் இல்லை. மகனுக்கு ஏதோ அபாயம் ஏற்பட்டிருக்கலாம் என, சரோஜம்மா அஞ்சுகிறார்.
ஹெச்.எஸ்.ஆர்., லே - அவுட் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும், அவர்கள் புகாரை ஏற்கவில்லை என, கூறப்படுகிறது. சரோஜம்மா தனியாகவே மகனை தேடி வருகிறார்.